அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள ஒரு கபேவில் சாண்ட்விச்சில் இருந்த சீஸை அகற்றுவதற்கே கூடுதல் கட்டணம் கேட்டதாக இந்திய உள்ளடக்க உருவாக்குநர் ஒருவர் கூறிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் சுமார் 7 லட்சம் பின்தொடர்வோர் கொண்ட வாக்மிதா சிங், சமீபத்திய அமெரிக்கப் பயண அனுபவங்களை பகிரும் வீடியோவில் இந்த சம்பவத்தை குறிப்பிட்டுள்ளார். அந்த வீடியோவில், “அமெரிக்காவில் என்ன நடக்கிறது?” என அவர் கேள்வி எழுப்பினார்.

அவர் கூறியதாவது: கபேவில் சாண்ட்விச் வாங்கியபோது அதில் இருந்த சீஸை அகற்றுமாறு சர்வரிடம் கேட்டேன். அதற்கு இந்திய மதிப்பில் சுமார் ரூ.72 ஆகும் என்று தெரிவித்தனர். “நான் சாப்பிடாததற்கு ஏன் பணம் செலுத்த வேண்டும்?” என்று கேட்டதாகவும் அவர் சொன்னார்.

இதற்கு சர்வர், “சீஸ் இல்லாமல் சாண்ட்விச் தயாரிக்க கூடுதல் முயற்சி தேவை; அதற்காகத்தான் கட்டணம்” என்று பதிலளித்ததாக அவர் கூறினார். அந்த விளக்கம் தன்னை திருப்திப்படுத்தவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வீடியோ பரவலாக பகிரப்பட்டதைத் தொடர்ந்து, பல நாடுகளில் தங்களுக்கு ஏற்பட்ட இதுபோன்ற அனுபவங்களை நெட்டிசன்கள் கருத்துப் பகுதியில் பதிவிட்டு வருகின்றனர்.