கர்நாடகாவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஆண்டுக்கு ரூ.40 லட்சம் வருமானம் ஈட்டும் நபரின் திருமண வரனை நிராகரித்ததாக கூறிய பதிவு சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

ஆருஹி ரெட்டி என அடையாளப்படுத்தப்பட்ட அந்தப் பெண், வரன் நல்ல தோற்றம் கொண்டவர் என்றும், நல்ல குடும்பப் பின்னணி உள்ளவர் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆனால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காங்கிரஸ் எம்பியும் லோக்சபா எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியை ‘முன்மாதிரி’ எனக் குறிப்பிட்டிருந்ததைப் பார்த்ததும் வரனை மறுத்ததாக தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில் ராகுல் காந்தியை கடுமையாக விமர்சித்த அவர், பணம், தோற்றம், வேலைவாய்ப்பு ஆகியவற்றைவிட நாடும் மதமும் தமக்கு முக்கியம் என கூறியுள்ளார். தன்னை ‘தேசியவாத ஹிந்து’ என குறிப்பிடும் அவர், ராகுலை முன்மாதிரியாகக் கருதுபவரை வாழ்க்கைத்துணையாக ஏற்க முடியாது என்றும் எழுதியுள்ளார்.

இந்த பதிவு பாஜ ஆதரவாளர்களால் அதிகமாக பகிரப்பட்டதாக கூறப்படுகிறது. ஆதரவும் எதிர்ப்பும் கலந்த கருத்துகள் பதிவாகி வரும் நிலையில், மீம்ஸ்களும் பரவுகின்றன. மேலும் சிலர் அந்தப் பெண்ணின் முந்தைய பாஜ ஆதரவு பதிவுகளை சுட்டிக்காட்டி விமர்சனமும் முன்வைத்து வருகின்றனர்.