தமிழக சட்டசபையில், மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பான முறைகேடு குறித்த விவாதத்தின் போது, தி.மு.க. மேயர்கள் மற்றும் நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள் தற்போதைய அரசுடன் ஒத்துழைப்பதில்லை என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா குற்றம்சாட்டியதால் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
விவாதத்தில் த.வெ.க. உறுப்பினர் தங்கப்பாண்டி, கடந்த ஆட்சியில் மதுரை மாநகராட்சியில் சொத்து வரி தொடர்பாக 200 கோடி ரூபாய் அளவிலான ஊழல் நடந்ததாக கூறினார். இதற்கு தி.மு.க. தலைவர் கே.என்.நேரு, தி.மு.க. ஆட்சிக்காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டதாகவும், ஐந்து அதிகாரிகள், மேயர் மற்றும் ஐந்து மண்டலத் தலைவர்கள் நீக்கப்பட்டதாகவும், வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதாகவும் தெரிவித்தார்.
அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, மதுரை மாநகராட்சி முழுவதும் ஊழலில் ஊறிப்போனதாக கூறி, மக்கள் போராட்டத்திற்குப் பிறகு மேயரின் கணவர் கைது செய்யப்பட்டதும், மேயர் ராஜினாமா செய்ததும் நடந்ததாக குறிப்பிட்டார். மேலும், பல மாநகராட்சிகளில் ஊழல் நடந்துள்ளதாகவும், எந்தெந்த இடங்களில் நடந்தது என்பதை விரைவில் வெளிப்படுத்துவோம் என்றும் தெரிவித்தார்.
அமைச்சர் நிர்மல்குமார், மதுரை மாநகராட்சியில் 60 ஆயிரத்துக்கும் அதிகமான வணிகக் கட்டடங்களின் மதிப்பீடு சரியாக செய்யப்படவில்லை என்றும், மின் இணைப்பில் வணிகப் பயன்பாடு என இருந்தாலும் சொத்து வரியில் வேறு வகைப்படுத்தல் இருப்பதாகவும் கூறினார். கடந்த இரண்டு மாதங்களாக மறுமதிப்பீடு நடைபெற்று வருவதாகவும், சென்னையிலும் இதேபோல் மறுமதிப்பீடு செய்ய திட்டமுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் தப்பிக்க முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.
ஆதவ் அர்ஜுனா, பல இடங்களில் பெண்கள் குடங்களைத் தூக்கி தண்ணீருக்காக அலைவதாகவும், வீடுகளுக்கு குழாய் வழியாக தண்ணீர் வழங்க முடியாத நிலை இருப்பதாகவும் கூறினார். மேலும், 25 மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் இன்னும் தி.மு.க. கட்டுப்பாட்டிலேயே உள்ளதாகவும், மாநிலத்தில் ஆட்சி மாறினாலும் உள்ளாட்சி துறையில் அதிகார மாற்றம் இல்லை என்றும் குற்றம்சாட்டினார். இன்னும் ஆறு மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரும் என்றும், அப்போது 90 சதவீதம் வெற்றி பெறுவோம்; அதன் பின்னர் ஊழல் ஆதாரங்கள் வெளிவரும் என்றும் அவர் கூறினார். இதற்கு கே.என்.நேரு, த.வெ.க. ஆட்சிக்கு வந்த பின் உள்ளாட்சி அமைப்புகளில் நிதி ஒதுக்கப்பட்ட பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன என்றும், மேயர் அரசு திட்டங்களை செயல்படுத்தவில்லை என்றால் கமிஷனரே செயல்படுத்த முடியும் என்றும் பதிலளித்தார்.





