மஹாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டம் அம்பாஜோகாய் பகுதியைச் சேர்ந்த 47 வயது ரமாபாய் ரன்வீர், மகள்களின் கல்விக்காக உதவ வேண்டும் என்ற நோக்கில் உள்ளூர் மாரத்தான் போட்டியில் சேலை அணிந்து வெறும் காலில் ஓடி முதலிடம் பெற்றார். அவருக்கு முதல் பரிசாக ரூ.3,000 வழங்கப்பட்டது.

மும்பையில் நடந்த சாலை விபத்தில் கணவரை இழந்த ரமாபாய்க்கு இரண்டு மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு நல்ல கல்வி கிடைக்க வேண்டும் என்பதே அவரது கனவு. இதற்காக, மூத்த மகள் போட்டித் தேர்வுகளுக்காக படிக்கும் கல்விமையத்திலேயே ரமாபாய் சமையலராக பணியாற்றி வருகிறார்.

இதனிடையே, ஒரு உள்ளூர் அமைப்பு மாரத்தான் போட்டியை அறிவித்து முதல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும் என தெரிவித்தது. விளையாட்டு உடை அல்லது ஷூ இல்லாத நிலையில், ரமாபாய் சேலை அணிந்தபடி போட்டியில் கலந்து கொண்டார். தொடக்கத்தில் செருப்பு அணிந்திருந்தாலும், ஓட்டத்தின் ஆரம்பத்திலேயே அதை கழற்றி வைத்து, சாலையில் கிடந்த கற்களைப் பொருட்படுத்தாமல் வெறும் காலில் தொடர்ந்து ஓடி முதலிடம் பிடித்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தார்.

போட்டிக்குப் பிறகு பேசிய ரமாபாய், பல பெண்கள் பங்கேற்றாலும் பரிசை வெல்வது என உறுதியாக இருந்ததாக கூறினார். ஓடும் போது மகள்களின் எதிர்காலமே கண் முன் நின்றதாகவும், கிடைத்த ரூ.3,000 மகளுக்கு புத்தகம் வாங்க உதவும் என்றும் தெரிவித்தார்.

இந்த போட்டியில் அவரது இளைய மகள் பூஜாவும் பங்கேற்று இரண்டாம் இடம் பிடித்தார். தாயை ஊக்குவிக்கவே போட்டியில் கலந்து கொண்டதாகவும், தாய் முதலிடம் பிடிப்பார் என எதிர்பார்க்கவில்லை என்றும் அவர் கூறினார். பூஜாவின் அர்ப்பணிப்பை பார்த்த கல்விமைய இயக்குனர், அவரது பயிற்சிக்கான செலவை தானே ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளார்.