சென்னை உள்ளிட்ட நகரங்களில் ஆட்டோ மற்றும் செயலி வழி கால் டாக்ஸிகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த, தமிழகத்தில் ‘பாரத் டாக்ஸி’ செயலியை விரைவில் அறிமுகப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நுகர்வோர் அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
நகரமயமாக்கல் அதிகரிப்பதுடன், தினசரி பயணங்களில் ஆட்டோ, கால் டாக்ஸி பயன்பாடும் உயர்ந்து வருகிறது. ஆனால் தனியார் செயலிகள் மூலம் நிரந்தர கட்டணம் இல்லாததால், பயணியர் தேவை அதிகமாகும் நேரங்களில் பல மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே செயலியில் பதிவு செய்து, குறைந்த மற்றும் நியாயமான கட்டணத்தில் பயணிக்க உதவும் வகையில் ‘பாரத் டாக்ஸி’ செயலி சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. டில்லி, குஜராத், ஜார்க்கண்ட் உள்ளிட்ட சில மாநிலங்களில் இது பயன்பாட்டில் இருந்தாலும், தமிழகத்தில் இன்னும் தொடங்கப்படவில்லை.
தமிழ்நாடு நுகர்வோர் பாதுகாப்பு பேரமைப்பு மாநிலத் தலைவர் பால் பர்ணபாஸ் கூறுகையில், சென்னை போன்ற பெரிய நகரங்களில் குறுகிய தூர பயணத்திற்கே தினமும் லட்சக்கணக்கானோர் ஆட்டோ, கால் டாக்ஸிகளை பயன்படுத்துகின்றனர்; ஆனால் நிர்ணயிக்கப்படாத கட்டணத்தால் கூடுதல் தொகை செலுத்தி அவதிப்படுகின்றனர் என்றார்.
மத்திய அரசு செயல்படுத்தும் ‘பாரத் டாக்ஸி’ செயலியில் நியாயமான கட்டணம் நிர்ணயித்து வசூலிக்கப்படுவதால், இதை தமிழகத்தில் கொண்டு வர மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அதற்கு முன் நுகர்வோர் அமைப்புகள், வாகன உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் ஆகியோர் பங்கேற்கும் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடத்தி கருத்துகளை கேட்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.





