சென்னை: தமிழகத்திற்கு வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில், தொழில்துறை அமைச்சர் கீர்த்தனா செப்.4ல் தைவான் செல்லவும், முதல்வர் விஜய் செப்.10ல் பிரிட்டன் செல்லவும் திட்டமிடப்பட்டுள்ளது.
தென் மாநிலங்களில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம்–ஆந்திரா இடையே கடும் போட்டி நிலவுவதால், முதலீட்டு ஈர்ப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த வாரம் தைவானில், செமிகண்டக்டர், ஏ.ஐ., சிப் உள்ளிட்ட துறைகளில் செயல்படும் பல நாடுகளைச் சேர்ந்த நிறுவனங்கள் பங்கேற்கும் ‘செமிகான்’ மாநாடு நடைபெறுகிறது. இதில் பங்கேற்க அமைச்சர் கீர்த்தனா, வழிகாட்டி நிறுவன அதிகாரிகள் அடங்கிய குழுவுடன் செப்.4ல் நடைபெறும் கூட்டங்களில் கலந்துகொண்டு தமிழகத்தை முதலீட்டு தளமாக முன்வைக்க உள்ளார்.
முதல்வர் விஜய், தொழில்துறை அதிகாரிகள் அடங்கிய உயர்மட்ட குழுவுடன் செப்.10ல் பிரிட்டன் செல்ல உள்ளார். இந்த சுற்றுப்பயணம் செப்.16 வரை நீடித்து, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு அழைப்பு விடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.
மே மாதம் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பின்னர், அமைச்சர் கீர்த்தனா தென்கொரியா சென்று கப்பல் கட்டும் நிறுவனங்களின் முதலீட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முதல்வராக பொறுப்பேற்ற பின் விஜய் மேற்கொள்ளும் முதல் அரசு முறை வெளிநாட்டு பயணம் இதுவாகும் என்றும் தொழில்துறை அதிகாரிகள் கூறினர்.





