லட்சத்தீவின் அகத்தியில் மத்திய மீன்வளத்துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய சிபி. ராதாகிருஷ்ணன், எதிர்கால தலைமுறைக்காக கடல் வளங்களை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தினார். சட்டவிரோதம் மற்றும் கட்டுப்பாடற்ற மீன்பிடிப்பை தடுப்பதும் முக்கியம் என்றார்.

இந்தியா தற்போது உலகின் இரண்டாவது பெரிய மீன் உற்பத்தியாளராக உள்ளதாகவும், உலகளவில் 8% பங்களிப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார். மீன்வளத்துறையால் சுமார் 3 கோடி மீனவர்கள் மற்றும் மீன் பண்ணையாளர்கள் வாழ்வாதாரம் பெறுகின்றனர் என்றும் கூறினார்.

இந்திய கடல் உணவுப் பொருட்கள் 120-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், கடந்த நிதியாண்டில் கடல் உணவு ஏற்றுமதி ரூ.73,000 கோடியை தாண்டியதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மீன்பிடி தொழிலை பாரம்பரிய தொழிலாக மட்டும் பார்க்காமல், தொழில்நுட்பம், அறிவியல் மற்றும் உலக சந்தை வாய்ப்புகள் நிறைந்த நவீன துறையாக இளைஞர்கள் கருத வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

மேலும், நாட்டின் பிரத்யேக மீன்வள பொருளாதார மண்டலத்தில் சுமார் ஆறில் ஒரு பங்கு லட்சத்தீவுடன் தொடர்புடையதாகவும், இப்பகுதியில் ஆண்டுக்கு ஒரு லட்சம் டன்னுக்கும் அதிகமான மீன்வளத்தை பெற முடியும் என்றும் தெரிவித்தார். இதில் சுமார் 94,000 டன் டூனா உள்ளிட்ட உயர்மதிப்புடைய மீன்கள் உள்ளதாகவும், ஜப்பான் போன்ற சர்வதேச சந்தைகளில் இவை அதிக மதிப்புடன் தேவைப்படுவதாகவும் அவர் கூறினார்.