பாஜ மூத்த தலைவர் ஹெச். ராஜாவுக்கு விதிக்கப்பட்ட சிறை தண்டனையை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (செப். 1) ரத்து செய்து உத்தரவிட்டது. சென்னை எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் நடந்த இரண்டு வழக்குகளின் தீர்ப்பை எதிர்த்து அவர் மேல்முறையீடு செய்திருந்தார்.
2018ஆம் ஆண்டு சமூக வலைதள பதிவில், லெனின் சிலை உடைக்கப்பட்டது போல ஈவெரா சிலையும் உடைக்கப்படும் என அவர் குறிப்பிட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, ஈரோடு டவுன் மற்றும் கருங்குளம் காவல் நிலையங்களில் தபெதிக சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன.
மேலும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக எக்ஸ் தளத்தில் அவதூறு கருத்துகள் பதிவிட்டதாக மாஜி அமைச்சர் செல்வராஜ் ஈரோடு காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த இரு வழக்குகளும் சென்னையில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தன.
இந்த வழக்குகளில் 2024ஆம் ஆண்டு ஹெச். ராஜாவுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ.5,000 அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. இதை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், அவரது பேச்சு பொது அமைதியை சீர்குலைக்கும் வகையில் இல்லை என்றும், போதுமான ஆதாரங்கள் இல்லை என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டு, தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்டது.





