தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு வழக்கில், மூன்று உயர் அதிகாரிகள் மீது தொடங்கப்பட்ட துறை ரீதியான நடவடிக்கையில் “மேல் நடவடிக்கை” ஏன் கைவிடப்பட்டது என்று தமிழக அரசிடம் மதுரை கிளை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்த வழக்கு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் நேரில் ஆஜராகி, அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையை அரசு 2022ல் ஏற்றதாகவும், அதன் அடிப்படையில் மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த நிலவர அறிக்கையையும் தாக்கல் செய்தார்.

அறிக்கையில், ஆணையம் 17 போலீஸ் அதிகாரிகள், அப்போதைய மாவட்ட கலெக்டர் மற்றும் வருவாய்த்துறையின் மூன்று அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரைத்ததாக குறிப்பிடப்பட்டது. மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.50 லட்சம், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்கவும் பரிந்துரை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக அப்போதைய கலெக்டர் வெங்கடேஷ், தென்மண்டல போலீஸ் ஐ.ஜி. சைலேஷ்குமார் யாதவ், திருநெல்வேலி டி.ஐ.ஜி. கபில்குமார் சரத்கார் ஆகியோர் மீது துறை ரீதியான நடவடிக்கை தொடங்கப்பட்டாலும், 2024 மற்றும் 2025ல் மேல் நடவடிக்கை கைவிடப்பட்டதாகவும் கூறப்பட்டது.

மேலும், அப்போதைய எஸ்.பி. மகேந்திரனுக்கு குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்கப்பட்டு விசாரணை அதிகாரி நியமிக்கப்பட்டதாகவும், விசாரணை அறிக்கையில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அரசு அறிவுறுத்தியதாகவும் அறிக்கை தெரிவித்தது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் காயமடைந்தவர்களுக்கு காயத்தின் தன்மைக்கேற்ப இழப்பீடு வழங்கப்பட்டதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு கூடுதலாக தலா ரூ.5 லட்சம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது. பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 21 பேருக்கு அரசு வேலை வழங்கப்பட்டதாகவும், இன்ஸ்பெக்டர் திருமலை மீது மதுரை நீதிமன்றத்தில் சி.பி.ஐ. குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, மூன்று ஐ.ஏ.எஸ்./ஐ.பி.எஸ். அதிகாரிகள் மீதான மேல் நடவடிக்கையை கைவிட எதன் அடிப்படையில் முடிவு செய்யப்பட்டது என்பதை செப்.10க்குள் தெளிவுபடுத்த அரசு தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். மனுதாரர்கள் தரப்பும் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் எனவும் கூறினர்.