தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி வெளியிட்ட சுற்றறிக்கைக்கு அவர் எந்த சட்ட அதிகாரத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுத்தார் என்று சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

ஈரோட்டை சேர்ந்த அருண்குமார் தாக்கல் செய்த மனுவில், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களின் போது சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்க வேண்டும் என்றும், 2025 செப்டம்பரில் வெளியிடப்பட்ட டிஜிபி சுற்றறிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, அரசு தரப்பில் மிருகவதைத் தடைச் சட்டம் மற்றும் சென்னை உயர் நீதிமன்றம், மதுரை கிளை உள்ளிட்ட நீதிமன்ற உத்தரவுகளின் அடிப்படையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், இதே தொடர்பான பொதுநல மனு தலைமை நீதிபதி அமர்வில் நிலுவையில் இருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என்றும் கேட்டனர்.

ஆனால் நீதிபதி கால அவகாசம் வழங்க மறுத்து, தமிழகத்தில் சேவல் சண்டை நடத்தக்கூடாது என தடை விதிக்கும் சுற்றறிக்கை பிறப்பிக்க டிஜிபிக்கு என்ன அதிகாரம் உள்ளது என்று கேள்வி எழுப்பினார். போலீசுக்கு பல பணிகள் உள்ள நிலையில், சேவல் சண்டை உள்ளிட்ட நிகழ்வுகள் எங்கே நடக்கின்றன என்பதை கண்காணிப்பதே வேலையா என்றும் அவர் குறிப்பிட்டார்.

போலீஸ் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கை செப்டம்பர் 7-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.