சென்னை அருகே திட்டமிடப்பட்டுள்ள மாமல்லன் நீர்த்தேக்கம் தொடர்பான பணிகள் கடந்த ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ள நிலையில், திட்டம் ரத்து செய்யப்படலாம் என்ற தகவலும் வெளியாகியுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

கானத்தூர் முதல் கொக்கிலமேடு வரை 5,161 ஏக்கர் பரப்பளவில், 1.65 டி.எம்.சி. கொள்ளளவில் நீர்த்தேக்கம் அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஜனவரியில் அப்போது முதல்வராக இருந்த மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டிய இந்தத் திட்டம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு நாளொன்றுக்கு 170 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கும் நோக்கில் உருவாக்கப்பட்டது. இதற்காக ரூ.342 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டிருந்தது.

ஆனால், இந்தத் திட்டத்தால் உப்பளங்கழிகள் அழிக்கப்படும் என்றும், கடற்கரை முகப்பு பகுதிகள் பாதிக்கப்படும் என்றும் கூறி மீனவர்கள் மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதன் பின்னணியில், திட்டம் கைவிடப்படலாம் என்ற தகவல் கிடைத்துள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

குடிநீர் வழங்கல் துறை அதிகாரிகள் கூறுகையில், சென்னை புறநகரின் குடிநீர் தேவைக்காக கடல் நீர் சுத்திகரிப்பு மேற்கொள்ளப்படுவதால், ஒரு லிட்டர் கடல் நீரை சுத்திகரிக்க ரூ.7 வரை செலவாகும் சூழல் இருப்பதாக தெரிவித்தனர். இந்த கூடுதல் செலவை கருத்தில் கொண்டு தான் நீர்த்தேக்கத் திட்டம் தொடங்கப்பட்டதாகவும் கூறினர்.

முதற்கட்டமாக கரை அமைக்கும் பணிகள் தொடங்கி சுமார் 15% நிறைவடைந்த நிலையில், புதிதாக அமைந்த த.வெ.க. அரசு நீர்வளம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைகளின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதையடுத்து, கரை அமைக்கும் பணி ஒரு வாரமாக நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

திட்டம் ரத்து செய்யப்பட்டால், சென்னை புறநகரின் குடிநீர் தேவையை அடுத்த ஆறு ஆண்டுகள் பூர்த்தி செய்வது கடினமாகலாம் என்றும், வறட்சி காலங்களில் குடிநீர் வழங்கல் துறைக்கு பெரிய சவால் உருவாகலாம் என்றும் அதிகாரிகள் எச்சரித்தனர்.