மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கான நீர் திறப்பை இன்று காலை 11:00 மணிக்கு தமிழக முதல்வர் விஜய் தொடங்கி வைக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 12 அன்று டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம் 13 டெல்டா மாவட்டங்களில் சுமார் 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, சம்பா, தாளடி உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால் நடப்பாண்டில் அணை நீர்மட்டம் குறைவாக இருந்ததால் நீர் திறப்பு தாமதமானது.

பாசனத்துக்கு நீர் திறக்க அணை நீர்மட்டம் குறைந்தபட்சம் 90 அடி மேல் இருக்க வேண்டும். நேற்று அணை நீர்மட்டம் 91.15 அடியாகவும், நீர் இருப்பு 53.97 டி.எம்.சி.யாகவும் இருந்தது. நீர்வரத்து 11,501 கனஅடி என பதிவானது.

முதல்வர் வருகையை முன்னிட்டு ஏ.டி.ஜி.பி. அன்பு தலைமையில் கோவை ஐ.ஜி. உள்ளிட்ட மூத்த போலீஸ் அதிகாரிகள் அணை மேல்பகுதியில் ஆய்வு செய்து, நீர்வளத்துறை பொறியாளர்களுடன் ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர். மேலும் அமைச்சர்கள் ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் சேலம் கலெக்டர் இளம்பகவத் ஆகியோரும் அணையில் ஆய்வு செய்து ஏற்பாடுகளை பரிசீலித்தனர்.

பாதுகாப்பு ஏற்பாடுகளாக ஏ.டி.ஜி.பி. அன்பு தலைமையில் ஒரு ஐ.ஜி., நான்கு டி.ஐ.ஜி.க்கள், 16 எஸ்.பி.க்கள், 15 ஏ.டி.எஸ்.பி.க்கள், 39 டி.எஸ்.பி.க்கள், 80 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் எஸ்.ஐ.க்கள் உள்ளிட்ட மொத்தம் 3,804 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.