பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன், தவெக அரசின் முதல் 100 நாள் ஆட்சிக்கு “மைனஸ் 80” மதிப்பெண் தருவதாக தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அரசின் செயல்பாடுகள் பல்வேறு அம்சங்களில் திருப்திகரமாக இல்லை என குற்றம்சாட்டினார்.
சமூக வலைத்தளங்களில் தவெக ஆதரவாளர்கள் பொய்யான ‘ரீல்ஸ்’களை பரப்புவதாகவும், இது இளம் தலைமுறையினரின் எதிர்காலத்தை பாதிக்கக்கூடும் என்றும் அவர் கூறினார். மேலும் காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு மற்றும் கூட்டணி அரசியல் தொடர்பாகவும் விமர்சனங்களை முன்வைத்தார்.
தமிழக சட்டசபை நடவடிக்கைகள் குறித்து பேசிய நயினார் நாகேந்திரன், கடந்த காலங்களில் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் நடந்ததாகவும், தற்போது அமைச்சர்கள் தரக்குறைவாக பேசுவது வருத்தமளிப்பதாகவும் கூறினார். சபாநாயகர் நடுநிலையாக செயல்பட வேண்டும் என்றும், அவைக்குள் மத அல்லது சாதி அடையாளங்களை முன்னிறுத்துவது சட்டசபையின் மாண்பை குலைக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
தலைமைச்செயலகத்தில் முதல்வர் அறையை மாற்றியமைக்க ரூ.5.40 கோடி செலவிடப்பட்டதாகவும், இதற்கு டெண்டர் கோரப்படவில்லை என அமைச்சரே ஒப்புக்கொண்டதாகவும் கூறி, டெண்டர் இன்றி இவ்வளவு பெரிய தொகையை ஒதுக்குவது “கூட்டு ஊழல்” என அவர் விமர்சித்தார். ஜல்லிக்கட்டு குறித்து சட்டசபையில் கொச்சைப்படுத்தி பேசப்பட்டதாகவும், 2002 கோத்ரா சம்பவம் போன்ற விஷயங்களை அவையில் பேச வேண்டிய அவசியம் என்ன என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும் ‘தனி தொகுதிகள்’ என்ற பெயரை ‘சிறப்புத் தொகுதி’ என மாற்றும் கோரிக்கையில் யாருடைய மனமும் புண்படாத வகையில் அணுக வேண்டும் என்றும் அவர் கூறினார்.





