காத்மாண்டு: நேபாளத்தில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பேரழிவின் பின்னணியில், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீட்டின் இடிபாடுகளருகே ஒரு செல்ல நாய் உரிமையாளர்களைத் தேடி காத்திருக்கும் காட்சி பலரையும் உருக்கி உள்ளது.
கடந்த வாரம் பனிப்பாறை சரிவால் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. இதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,000-ஐ நெருங்கி வருவதாகவும், 3,000க்கும் மேற்பட்டோர் இன்னும் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிசூலி பஜார், ரசுவா உள்ளிட்ட பகுதிகளில் பல வீடுகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.
திரிசூலி பஜாரில், கழுத்தில் பட்டை அணிந்திருந்த கருப்பு-வெள்ளை நாய் இடிபாடுகளுக்கு நடுவே பல நாட்களாக அதே இடத்தில் இருந்து உரிமையாளர்கள் திரும்ப வருவதை எதிர்பார்த்து காத்திருக்கிறது. மீட்புப் பணிகளில் ஈடுபட்ட குழுவினரும் ஜேசிபி இயந்திரங்களும் அருகில் செயல்பட்டபோதும், அது தன் இடத்தை விட்டு நகர மறுத்ததாக கூறப்படுகிறது.
யாரையும் அருகே விடாமல் இருந்ததால், விலங்கு நல ஆர்வலர்கள் தூரத்திலிருந்தே உலர் உணவும் தண்ணீரும் வழங்கி பராமரித்தனர். இந்தக் காட்சி தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி, செல்லப்பிராணிகளின் பாசத்தை மீண்டும் நினைவூட்டியுள்ளது.
இதற்கிடையில் ரசுவா போன்ற பகுதிகளில் வெள்ளத்தில் சிக்கிய சில நாய்கள் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதில் 4 நாட்கள் சிக்கியிருந்த ‘ஸ்வீட்டி’ என்ற காது கேளாத வளர்ப்பு நாயும் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது; இதற்கான வீடியோக்களும் சமூக வலைதளங்களில் பரவுகின்றன.





