சென்னை: திமுக ஆட்சிக் காலத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் அமைச்சர்கள் ‘குறுநில மன்னர்கள்’ போல செயல்பட்டு, இடம் இடமாக ஆட்களை வைத்து வசூல் செய்ததாக அமைச்சர் நிர்மல் குமார் குற்றம் சாட்டினார்.
நிருபர்களிடம் பேசிய அவர், கனிம வளங்கள் முறையான அளவீடு இன்றி, ஜிஎஸ்டி செலுத்தாமல் எடுத்துச் செல்லப்பட்டதாகவும், அமலாக்கத்துறை சோதனைகளின் மூலம் பல்வேறு முறைகேடுகள் வெளிவந்ததாகவும் கூறினார்.
தற்போதைய ஆட்சியில் கனிம வளங்களை ஒழுங்குமுறையுடன் வெட்டி எடுக்க புதிய திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், அரசு அனுமதித்த அளவிலேயே கனிம வளங்கள் எடுக்கப்படும் என உறுதியளித்தார்.
அபராதம் விதிக்கப்பட்டால் அது கட்டாயம் செலுத்தப்பட வேண்டும்; இதில் எந்த தளர்வும் இல்லை என்றும் அவர் கூறினார். மேலும், திமுகவினர் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், தற்போது அத்தகைய நடைமுறைகள் தொடராது என்றும் தெரிவித்தார்.
அரசியல் கருத்துகளுக்குப் பதிலளித்த அவர், விஜய் பிரதமராக வேண்டும் என்று கூறுவதில் சர்ச்சை இல்லை என்றும், தமிழகத்திலிருந்து ஒருவர் வர வேண்டும் என்பது மக்களின் ஆசை என்றும் கூறினார். கூட்டணியில் முரண் இல்லை; இதை தினசரி விவாதமாக மாற்ற வேண்டாம் என்றும் அவர் வலியுறுத்தினார்.





