சட்டசபையில் உணவுப்பொருள் பாதுகாப்புத்துறை அமைச்சர் வெங்கடரமணன், நகர்ப்புற பகுதிகளில் உள்ள நியாயவிலை (ரேஷன்) கடைகள் மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் வெங்காயம் கிலோ ரூ.35க்கு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்தார்.
வெளிச்சந்தையில் வெங்காயம் கிலோ ரூ.56 முதல் ரூ.60 வரை விற்பனை ஆகும் நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் கூறினார். ஈரான் போர் காரணமாக வாகன எரிவாயு விலை உயர்ந்து போக்குவரத்து செலவு அதிகரித்ததும், வெங்காய உற்பத்தி அதிகம் உள்ள மத்திய பிரதேசம் மற்றும் மகாராஷ்டிராவிலிருந்து வரத்து குறைந்ததும்தான் இதற்கான காரணங்கள் என விளக்கினார்.
விலை உயர்வை உடனடியாக கட்டுப்படுத்தவும், ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களின் நலனை கருத்தில் கொள்ளவும், தேசிய வேளாண்மை கூட்டுறவு சந்தைப்படுத்தல் கூட்டமைப்பு மற்றும் தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு மூலம் முதற்கட்டமாக 1,000 மெட்ரிக் டன் வெங்காயம் கொள்முதல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இந்த வெங்காயம் நகர்ப்புற கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகள், பிரதான விற்பனை பண்டகசாலைகள், அமுதம் அங்காடிகள் மற்றும் நகர்ப்புற நியாயவிலை கடைகள் வழியாக வழங்கப்படும்.
முதற்கட்டமாக நகர்ப்புற பகுதிகளில் உள்ள 80 லட்சம் குடும்ப அட்டைதாரர்களை கொண்ட 8,739 நியாயவிலை கடைகளில், வரும் செப்.3 முதல் குடும்ப அட்டை ஒன்றுக்கு 1 கிலோ வெங்காயம் ரூ.35க்கு வழங்கப்படும். தேவையின் அடிப்படையில், மேற்கண்ட தேசிய கூட்டுறவு அமைப்புகளுடன் இணைந்து கூடுதல் அளவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.





