ஆண்ட்ராய்டு மொபைல் பயனர்களை குறிவைத்து, ஆபாசத் தீம் கொண்ட செயலிகள் மூலம் வங்கி கணக்குகளில் இருந்து பணத்தை திருடும் புதிய சைபர் மோசடி அதிகரித்து வருவதாக மத்திய உள்துறை அமைச்சகம் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையத்தின் கீழ் செயல்படும் தேசிய சைபர் குற்ற அச்சுறுத்தல் பகுப்பாய்வு பிரிவு வெளியிட்ட அறிக்கையில், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்கள் வழியாக இத்தகைய ஆபத்தான செயலிகள் பரப்பப்படுவதாக கூறப்பட்டுள்ளது. விளம்பரங்களை கிளிக் செய்யும் பயனர்கள் ஆபாச இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு, அங்கிருந்து கூகுள் பிளே ஸ்டோருக்கு வெளியே உள்ள செயலிகளை பதிவிறக்கம் செய்ய வைக்கப்படுகின்றனர்.

“நைட் பிளே”, “ரீலுாப்”, “கிஸ்”, “விமோ”, “ரிவோ”, “நெக்ஸோ”, “விக்ஸா” போன்ற பெயர்களில் செயலிகள் உலா வருவதாகவும், நிறுவியதும் பல்வேறு அனுமதிகளை கேட்பதாகவும் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. குறிப்பாக ‘அக்செசிபிலிட்டி’ அனுமதியைப் பெற்று பின்புலத்தில் இயங்கி, பயனருக்கு தெரியாமலேயே போனை கட்டுப்பாட்டில் கொண்டு வங்கி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேலும், ‘அப்டேட்’ என்ற பெயரில் கூடுதல் ‘மால்வார்’ பதிவிறக்கம் செய்து மொபைல் தரவுகளை திருடும் அபாயமும் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே செயலிகளை கூகுள் பிளே ஸ்டோர் அல்லது அங்கீகரிக்கப்பட்ட தளங்களில் இருந்து மட்டும் பதிவிறக்கம் செய்யவும், சந்தேகத்திற்கிடமான இணைப்புகள்/விளம்பரங்களை தவிர்க்கவும், தெரியாத செயலிகளுக்கு ‘அக்செசிபிலிட்டி’ அனுமதி வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. போனில் உள்ள செயலிகளை தொடர்ந்து கண்காணித்து தேவையற்ற அல்லது தெரியாத செயலிகளை உடனடியாக நீக்கவும் கூறப்பட்டுள்ளது.

பாதுகாப்புக்காக ‘கூகுள் பிளே புரொடெக்ட்’ வசதியை இயங்கும் நிலையில் வைத்திருக்கவும், மொபைல் மென்பொருளை அவ்வப்போது புதுப்பிக்கவும், வங்கி மற்றும் யு.பி.ஐ. கணக்குகளை அடிக்கடி சரிபார்க்கவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அல்லது இத்தகைய மோசடி செயலிகளை கண்டறிபவர்கள் 1930 என்ற தேசிய உதவி எண் அல்லது www.cybercrime.gov.in தளத்தில் உடனடியாக புகார் அளிக்கலாம்.