இமயமலைத் தொடர் பரவியுள்ள அனைத்து நாடுகளையும் உள்ளடக்கிய ஒரு அமைப்பை உடனடியாக உருவாக்கி, அப்பகுதியில் ஏற்படும் பேரிடர்களை ஒருங்கிணைந்து எதிர்கொள்ள வேண்டும் என்று ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு வலியுறுத்தினார்.

நேபாளத்தின் காத்மாண்டுவில் நடைபெற்ற “நேபாளத்திற்கு துணை நிற்போம்” என்ற நிகழ்ச்சியில் அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்தார். சமீபத்திய வெள்ளப்பெருக்கில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்ட நிலையில், நடிகை மனிஷா கொய்ராலா உள்ளிட்ட பலரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

அரசியல் நிர்வாகங்கள் தனித்தனியாக இருந்தாலும், இமயமலைத் தொடர்களை எதிர்கால தலைமுறைகளுக்காக பாதுகாக்க வேண்டிய பொதுப் பொறுப்பாக நாடுகள் பார்க்க வேண்டும் என்று அவர் கூறினார். “இது நேபாளத்தின் பிரச்சனை” என்று ஒதுக்கிவிட்டால் தீர்வு கிடையாது என்றும், ஒரே அமைப்பாக நிர்வகிக்க முடியாவிட்டாலும் குறைந்தபட்சம் கலந்தாலோசித்து ஒருங்கிணைந்த அணுகுமுறையில் செயல்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த பேரழிவுகளுக்கு “தெய்வீக காரணங்கள்” அல்லது “நம்ப முடியாத மாய சக்தி” போன்ற விளக்கங்களை முன்வைத்து மனித துயரத்தை கொச்சைப்படுத்தக் கூடாது என்றும் அவர் தெரிவித்தார்.

நேபாள பிரதமர் பேரிடர் நிவாரண நிதிக்கு ஈஷா அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என்றும், கோவை ஈஷா யோகா மையத்தில் நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்காக “கால பைரவ கர்மா” செய்யப்படும் என்றும் சத்குரு அறிவித்தார்.