இந்தியாவின் செமிகண்டக்டர் உற்பத்தித் துறையை மேலும் வலுப்படுத்த ரூ.1.27 லட்சம் கோடி முதலீட்டு ஒதுக்கீட்டுடன் ‘செமிகான் 2.0’ திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது.

சிப் வடிவமைப்பு, செமிகண்டக்டர் உபகரணங்கள் மற்றும் மூலப்பொருட்கள், உற்பத்தி, பேக்கேஜிங், ஆராய்ச்சி, திறன் மேம்பாடு ஆகிய 6 முக்கிய பிரிவுகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், இந்தியாவின் செமிகண்டக்டர் துறையின் நீண்டகால வளர்ச்சியை நிலைநிறுத்தி வலுப்படுத்துவதே திட்டத்தின் நோக்கம் என்றும், உலகளாவிய செமிகண்டக்டர் விநியோகத் தொடரில் இந்தியா முக்கிய அங்கமாக மாற வேண்டும் என்றும் தெரிவித்தார். தகவல் தொழில்நுட்பத் துறை செயலர் எஸ்.கிருஷ்ணன், தற்சார்பு மற்றும் உலகளவில் போட்டியிடக்கூடிய தொழில்துறை சூழலை உருவாக்குவதே திட்டத்தின் இலக்கு என கூறினார்.

புதிய திட்டத்தின் கீழ், சிலிக்கான் சிப் உற்பத்தி ஆலைகளுக்கு தகுதியான மூலதனச் செலவில் 40% வரை நிதியுதவி வழங்கப்படும். கூட்டு செமிகண்டக்டர் மற்றும் டிஸ்பிளே ஆலைகளுக்கு 35%, மேம்பட்ட பேக்கேஜிங் திட்டங்களுக்கு 35%, வழக்கமான பேக்கேஜிங் திட்டங்களுக்கு 25% ஆதரவு அளிக்கப்படும்.

மேலும், அடுத்த 5 ஆண்டுகளில் 1 லட்சம் செமிகண்டக்டர் வடிவமைப்பு பொறியாளர்களுக்கு பயிற்சி அளிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. முதல் கட்ட ‘செமிகான் 1.0’ திட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட 12 திட்டங்களில், மைக்ரான், கேன்ஸ் செமிகான் மற்றும் சிஜி செமிகான் நிறுவனங்களின் 3 ஆலைகள் இந்த ஆண்டு வர்த்தக உற்பத்தியைத் தொடங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.