நீட் விவகாரத்தை முன்னிட்டு நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர் போராட்டங்களில் பங்கேற்றவர்கள்மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படக் கூடாது என்பதையே காரணமாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாள் கசிவு குறித்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பல மாநிலங்களில் மாணவர்கள் போராட்டம் நடத்தினர். டெல்லி ஜந்தர் மந்தரில், அப்போது மத்திய கல்வி அமைச்சராக இருந்த தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வேண்டும் எனக் கோரி ஒரு மாதத்துக்கும் மேலாக போராட்டம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டது.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்தார். சில இடங்களில் வன்முறை ஏற்பட்டதாகவும், அதன் பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாகவும் கூறப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, வி. மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, ஜூலை 20 முதல் ஜூலை 25 வரை நடைபெற்ற மாணவர் போராட்டங்கள் தொடர்பாக நாடு முழுவதும் எந்த மாநிலம் அல்லது யூனியன் பிரதேசத்திலும் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது. பீஹார், மேற்குவங்கம், அசாம், மஹாராஷ்டிரா ஆகிய நான்கு மாநிலங்கள் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தாலும், உத்தரவு நாடு முழுவதும் பொருந்தும் என நீதிமன்றம் தெரிவித்தது.

அதே நேரத்தில், கடுமையான குற்றப் பின்னணி உள்ளவர்கள் எனக் கூறி, ஜந்தர் மந்தர் போராட்டங்களில் தொடர்புடைய 2,873 நபர்கள் மீது ஒரே எப்.ஐ.ஆர் பதிவு செய்ய டெல்லி போலீசாருக்கு உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.