சென்னை: டாஸ்மாக் மதுக்கடைகளில் அதிகபட்ச சில்லரை விலை (MRP) விட கூடுதலாக வசூலிப்பதைத் தடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் திங்களன்று சட்டசபையில் தெரிவித்தார். ரூ.1 கூடுதலாக வசூலித்தால்கூட ஒழுங்கு நடவடிக்கை தொடங்கப்படும்; மீண்டும் அதே தவறு நடந்தால் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.
துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதத்திற்கு பதிலளித்த அமைச்சர், கூடுதல் தொகை வசூலித்ததாக கண்டறியப்படும் பணியாளர்கள் முதலில் மூன்று மாதங்கள் இடைநீக்கம் செய்யப்படுவர் என்றார். அதே பணியாளர் மீண்டும் தவறு செய்தால் நிரந்தரமாக பணியில் இருந்து நீக்கப்படுவர் என்றும், நுகர்வோரிடமிருந்து பெறப்படும் பணமாக இருந்தாலும் அரசுக்கு வர வேண்டிய பணமாக இருந்தாலும் எந்தத் துறையிலும் ஊழல் இருக்கக் கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது என்றும் தெரிவித்தார்.
அதிக விலை வசூலிப்பை முழுமையாகத் தடுக்கவும் பணியாளர் நலனையும் மேம்படுத்தவும் செப். 1 முதல் நீண்டகால பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் எனவும் அறிவித்தார். மாதம் ரூ.2,000-ல் தொடங்கிய ஊதியம் 23 ஆண்டுகளுக்குப் பிறகு ரூ.14,000 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிட்ட அவர், மேற்பார்வையாளர்களுக்கு ரூ.33,023, விற்பனையாளர்களுக்கு ரூ.30,284, உதவி விற்பனையாளர்களுக்கு ரூ.28,689 என ஊதியம் திருத்தி வழங்கப்படும்; இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.486.90 கோடி செலவு ஏற்படும் என்றார்.
மேலும் டாஸ்மாக் பணியாளர்களுக்கு பண்டிகை முன்பணமாக ரூ.20,000 வழங்கப்படும் என்றும், ஆண்டுதோறும் மூன்று சீருடைகளுக்கான துணி மற்றும் தையல் செலவாக ரூ.6,000 வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். கடைகளின் தூய்மை மற்றும் அடிப்படை வசதிகளுக்காக மாதந்தோறும் மாநகராட்சி எல்லைக்குள் உள்ள கடைகளுக்கு ரூ.5,000, நகராட்சி/பேரூராட்சி கடைகளுக்கு ரூ.4,000, கிராமப்புற கடைகளுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என்றும் கூறினார்.
பணியமைப்பு மற்றும் அமலாக்கம் தொடர்பாக, சுழற்சி முறையில் எட்டு மணி நேர பணி ஒதுக்கீடு, வாரம் ஒரு நாள் விடுமுறை, மாதத்தில் இரண்டு நாள் ஊதியத்துடன் கூடிய தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என அறிவித்தார். மேலும் தகுதியுள்ள 250 பேர் சிறப்பு தேர்வு மூலம் இளநிலை உதவியாளர்களாக நியமிக்கப்படுவர்; கள்ளச்சாராயம்/கள்ள மதுபான விற்பனை வழக்கில் சிறை தண்டனை பெற்று விடுதலையாகி மனம் திருந்தியவர்களுக்கு மறுவாழ்வு நிதி ரூ.50,000-ல் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தப்பட்டு ரூ.10 கோடி ஒதுக்கப்படும்; மதுவிலக்கு அமலாக்கப் பிரிவுக்கு ரூ.2.58 கோடியில் நவீன உபகரணங்கள் மற்றும் புதிய வாகனங்கள் வழங்கப்படும் என்றும் கூறினார். போதைப்பொருட்கள் மற்றும் மது தீமைகள் குறித்த விழிப்புணர்வு நிதி ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தப்படும்; சமூக ஊடகங்கள் வழியாக ரூ.2 கோடியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்; மாநிலத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் ஒழிக்க வலுவான மெத்தனால் பயன்பாட்டுக் கொள்கை உருவாக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.





