டாஸ்மாக் சில்லரை கடைகள் வழியாக விற்கப்படும் மதுபானங்களின் மீது விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் மதிப்பு கூட்டு வரி (VAT) மூலம் கடந்த நான்கு மாதங்களில் தமிழக அரசுக்கு ரூ.17,855 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் மாநிலம் முழுவதும் உள்ள சில்லரை கடைகள் மூலம் மது வகைகளை விற்பனை செய்கிறது. இந்த விற்பனையில் விதிக்கப்படும் ஆயத்தீர்வை மற்றும் VAT ஆகியவை அரசின் முக்கிய வருவாய் ஆதாரங்களில் ஒன்றாக உள்ளன.
நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் ஜூலை வரையிலான காலத்தில் ஆயத்தீர்வை மூலம் ரூ.4,066 கோடி, VAT மூலம் ரூ.13,789 கோடி என மொத்தமாக ரூ.17,855 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
மதுபான ஆலைகளில் இருந்து வாங்கப்படும் ஒவ்வொரு மது பெட்டிக்கும் சிறப்பு கட்டணம் விதிப்பது மற்றும் ஆன்லைன் மூலம் மது வகைகளை தேர்வு செய்து கடைகளில் வாங்கும் வசதி உள்ளிட்ட நடவடிக்கைகள் காரணமாக, இந்த நிதியாண்டில் வருவாய் ரூ.60,000 கோடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.





