தஞ்சாவூரின் பிரகதீஸ்வரர் (பெரியகோவில்) மாமன்னன் ராஜராஜ சோழனால் 1003-ம் ஆண்டு கட்டத் தொடங்கி, 1010-ம் ஆண்டு கட்டுமானம் நிறைவு பெற்றதாக கூறப்படுகிறது. “அடுக்குமானம்” என்ற நுட்பத்தில் கற்களை ஒன்றோடு ஒன்று இணைத்து அமைக்கப்பட்ட இந்தக் கோவில், தமிழக கட்டடக் கலையின் சிறப்பை காலம் கடந்தும் வெளிப்படுத்தி வருகிறது.

இந்தக் கோவில் யுனெஸ்கோவால் உலக பாரம்பரியச் சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இதை உலக அதிசய பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற நோக்கில் வரலாற்று ஆய்வாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இணைந்து “தஞ்சாவூர் பெரியகோவில் 8-வது உலக அதிசயம்” என்ற குழுவை உருவாக்கி, சில ஆண்டுகளாக பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், சட்டசபையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன், பைசா கோபுரம் சாய்ந்த நிலையில் இருப்பதை குறிப்பிட்டு, பல ஆண்டுகளாக கம்பீரமாக நிற்கும் பெரியகோவில் கோபுரமே உண்மையான அதிசயம் என பெருமையுடன் பேசியதாக தெரிவிக்கப்படுகிறது.

இதையடுத்து, அமைச்சர் பேச்சோடு நிற்காமல், பெரியகோவிலை உலக அதிசய பட்டியலில் இணைக்க செயல்வடிவமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர். வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகையில், உலக அதிசய பட்டியலில் இடம்பெற தேவையான தகுதிகள் பெரியகோவிலுக்கு உள்ளன என்றும், கருங்கற்களை மட்டுமே கொண்டு கட்டப்பட்ட உலகின் மிக உயரமான கோவில் இது எனவும், “அடுக்குமானம்” கட்டுமான நுட்பமே ஒரு அதிசயம் எனவும் தெரிவித்தனர்.

மேலும், தஞ்சாவூரைச் சேர்ந்த பொறியாளர்கள், டாக்டர்கள், ஆராய்ச்சியாளர்கள், வரலாற்று ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பல தரப்பினரையும் ஒருங்கிணைத்து கடந்த சில ஆண்டுகளாக முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக கூறினர். அமைச்சர் ராஜ்மோகன் பேசியதை வரவேற்கும் அதே நேரத்தில், மத்திய அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று பெரியகோவிலை உலக அதிசய பட்டியலில் கொண்டு வர முயற்சிக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தினர்.