அமெரிக்காவின் நியூயார்க் நகர டைம்ஸ் சதுக்கத்தில் 42வது வீதி–7வது அவென்யூ பகுதியில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்; மற்றொருவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இரண்டு கத்திகளுடன் வந்த மனநலம் பாதிக்கப்பட்ட பெண் பொதுமக்களை மிரட்டி இருவரை கத்தியால் குத்தியதாக தெரிவிக்கப்பட்டது. அங்கிருந்தவர்கள் காயமடைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அந்தப் பெண்ணிடம் கத்திகளை கீழே போடுமாறு பலமுறை வலியுறுத்தினர். ஆனால் அவர் மறுத்ததுடன், போலீசாரை தாக்குவதற்காக முன்னே வந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையடுத்து நியூயார்க் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் அவர் காயமடைந்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்; பின்னர் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவத்துக்கும் பயங்கரவாதத்துக்கும் தொடர்பில்லை என போலீசார் கூறினர்.
சம்பவம் நடந்த பகுதியின் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அந்தப் பகுதிக்கு பொதுமக்கள் வராமல் இருக்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.





