ஐஏஎஸ் என்பது சிவில் சர்வீசஸ் தேர்வில் முன்னணி இடங்களைப் பெறுபவர்களுக்கு மட்டுமே கிடைக்கும் கனவுப் பதவி. ஆனால் உத்தரப் பிரதேசத்தில் கடந்த ஏழு ஆண்டுகளில் 13 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிலிருந்து விலகியிருப்பது கவனம் ஈர்த்துள்ளது.

அறிக்கையின்படி, இவர்களில் 9 பேர் தாமாக முன்வந்து விருப்ப ஓய்வு (விஆர்எஸ்) பெற்றுள்ளனர். மேலும் 4 பேர் விஆர்எஸ் கிடைக்காத நிலையில் ராஜினாமா செய்துள்ளனர். 2017 முதல் உ.பி.யில் பாஜ ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் கடுமையான கட்டுப்பாடு மற்றும் துரித நடவடிக்கைகளுக்கு ஈடு கொடுக்க முடியாததால் அதிகாரிகள் விடுப்பு, மத்திய பணிக்கு செல்லுதல் அல்லது விலகல் போன்ற முடிவுகளை எடுப்பதாக அதிகாரிகள் மட்டத்தில் பேசப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் பதவி விலகியவர்களில் திவ்யா மித்தல் குறிப்பிடப்படுகிறார். 13 ஆண்டுகள் பணியாற்றிய அவர், கடைசியாக வருவாய்த்துறை சிறப்பு செயலாளராக இருந்தார். பதவி விலகலுக்கான காரணத்தை அவர் தெரிவிக்கவில்லை; இருப்பினும் வரவிருக்கும் சட்டசபை தேர்தலில் போட்டியிடலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் அமோத் குமார் 2025 நவம்பரில் விஆர்எஸ் பெற்றுள்ளார். அனாமிகா சிங் மத்திய அரசுப் பணிக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து விஆர்எஸ் எடுத்ததாகவும் கூறப்படுகிறது. மேலும், பணியை விட்டு வெளியேறும் அதிகாரிகள் தனியார் நிறுவனங்களில் பணியாற்றுதல் அல்லது ஆலோசகராக சேருதல் போன்றவற்றில் அதிக ஆர்வம் காட்டுவதாகவும், அதிக சம்பளம் மற்றும் சலுகைகள் முக்கிய காரணங்களாக குறிப்பிடப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.

பட்டியலில் பணியில் தொடர விருப்பமில்லை, தனிப்பட்ட/குடும்ப சூழல், மருத்துவ காரணங்கள், வேலை ஒதுக்கப்படவில்லை போன்ற காரணங்களைச் சொன்ன அதிகாரிகளும் உள்ளனர். மேலும், யோகி அரசு பதவிக்கு வந்த பிறகு 10 ஐபிஎஸ் அதிகாரிகளும் பணியிலிருந்து விலகியுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.