சென்னை மாநகராட்சி தூய்மைப் பணியாளர்கள் நடத்தி வரும் போராட்டம், தமிழக சட்டசபையில் விவாதமாகியது. போராட்டம் 15வது நாளை எட்டியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி அரசிடம் கேள்வி எழுப்பினார்.
தூய்மைப் பணியாளர்கள் தொடர்ந்து போராடி வருவதாகவும், அமைச்சர் ராஜ்மோகன் முன்பு விரைவில் தீர்வு எட்டப்படும் என கூறியிருந்ததாகவும் உதயநிதி குறிப்பிட்டார். ஆனால் இதுவரை சுமூக முடிவு எதுவும் இல்லை என கூறி, முதல்வர் விஜய் எப்போது கோரிக்கைகளை நிறைவேற்றுவார், தூய்மைப் பணியாளர்களை சந்தித்து பேசுவாரா எனவும் அவர் கேட்டார்.
இதற்கு பதிலளித்த அமைச்சர் ராஜ்மோகன், போராட்டத்தில் உள்ள பணியாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை அவையில் விரிவாக எடுத்துரைத்ததாக தெரிவித்தார். மேலும், கடந்த ஆட்சி காலத்தில் 100 நாட்கள், 150 நாட்கள் வரை அவர்கள் தொடர்ந்து போராடியிருந்ததை சுட்டிக்காட்டி, தற்போதைய சூழலை அரவணைப்புடன் கையாள்கிறோம் என்றார்.
பல கோரிக்கைகளை நிறைவேற்ற தேவையான கோப்புகள் தயாராக உள்ளதாகவும், சில கோரிக்கைகளில் நிதி சார்ந்த பிரச்னைகள் இருப்பதாகவும் அமைச்சர் கூறினார். பல சங்கங்கள் உள்ளதால் அனைவரையும் ஒன்றுசேர்த்து விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வுகளை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.





