காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையிலிருந்து நீரை முதல்வர் விஜய் செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தார். கிடைக்கும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, கடைமடை பகுதிகள்வரை முறையாக பகிர்ந்தளிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

மேட்டூர் அணையின் முழு நீர்மட்டம் 120 அடி. பொதுவாக அணை நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும் போது பாசனத்துக்கு நீர் திறக்கப்படும். இதன் மூலம் 13 டெல்டா மாவட்டங்களில் சுமார் 17.10 லட்சம் ஏக்கரில் குறுவை, தாளடி, சம்பா நெல் சாகுபடி நடைபெறுகிறது.

இந்த ஆண்டு வழக்கமான ஜூன் 12 அன்று அணை நீர்மட்டம் 79.56 அடியாக இருந்ததால் டெல்டா பாசனத்துக்கு நீர் திறக்கப்படவில்லை. ஆகஸ்ட் 1 முதல் கர்நாடகாவின் கபினி அணையிலிருந்து திறக்கப்பட்ட உபரி நீர் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வந்ததால் நீர்வரத்து மேம்பட்டது.

இதையடுத்து காலை 11.40 மணிக்கு முதல்வர் நீர் திறப்பை தொடங்கி வைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 3,000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு, பின்னர் 7,000 கனஅடியாக உயர்த்தப்பட்டது. நிகழ்வில் அமைச்சர்கள் ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், நீர்வளத்துறை உயர் அலுவலர்கள், சேலம் மாவட்ட ஆட்சியர் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், அணையின் நீர் இருப்பு மற்றும் நீர்வரத்தை தொடர்ந்து கண்காணித்து, பாசன தேவைக்கேற்ப நீர் வெளியேற்றம் படிப்படியாக முறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. வேளாண்மை, நீர்வளம், வருவாய் துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், காவிரி ஆறு மற்றும் கால்வாய்களில் சட்டவிரோத மின் மோட்டார் மூலம் நீர் உறிஞ்சுதல், அனுமதியின்றி நீர் எடுத்தல், நிர்ணய அளவை மீறி நீர் எடுப்பது போன்றவை தடுக்கப்படும் என்றும் கூறப்பட்டது. இதற்காக நீர்வளம், வருவாய், காவல், மின்சார துறை அலுவலர்கள் அடங்கிய கூட்டு கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு இரவு-பகலாக ரோந்து நடைபெறும்; தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தை கருத்தில் கொண்டு, குறைந்த நீர் தேவையுள்ள மத்திய கால நெல் ரகங்கள் மற்றும் நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர் சிக்கன முறைகளை பின்பற்றுமாறு விவசாயிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.