திமுக அமைப்பு மறு சீரமைப்பு பணியை முன்னெடுக்க, 38 வருவாய் மாவட்டங்களுக்கு தலா இருவர் வீதம் 76 தலைமை கழக பிரதிநிதிகளை கட்சி நியமித்துள்ளது. மாவட்ட அளவில் நிர்வாக மாற்றங்களை ஒருங்கிணைப்பதே இவர்களின் முக்கியப் பணியாகும்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஆகஸ்ட் 22 அன்று நடந்த திமுக செயற்குழு கூட்டத்தில் எடுத்த முடிவின் அடிப்படையில், கட்சியின் அமைப்புரீதியான 77 மாவட்டங்களை 110 மாவட்டங்களாக பிரிக்கும் நடவடிக்கை அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இந்த பிரதிநிதிகள் பட்டியல் வெளியிடப்பட்டதாக கூறப்படுகிறது.

கட்சி வட்டாரங்களில் பரவும் தகவலின்படி, இந்த 76 பிரதிநிதிகள் பட்டியலை திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின், துணை பொதுச்செயலர் கனிமொழி மற்றும் ஸ்டாலினின் மருமகன் சபரீசன் ஆகியோர் அடங்கிய ‘நால்வர் குழு’ தேர்வு செய்து இறுதிப்படுத்தியுள்ளனர்.

நியமிக்கப்பட்ட பிரதிநிதிகள் தங்கள் மாவட்டங்களில் மாவட்ட செயலர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு கூட்டங்களை நடத்தி புதிய நிர்வாக அமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும், வரும் 15 நாட்களுக்குள் தொகுதிவாரியாக நகரம், ஒன்றியம், பேரூர், வட்டம், கிளை உள்ளிட்ட அமைப்புகளைப் பிரிப்பதற்கான பரிந்துரைகளை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பணிகள் குறித்து ஆலோசித்து ஒருங்கிணைக்க, இன்று மாலை 5 மணிக்கு ஸ்டாலின் தலைமையில் 76 பிரதிநிதிகள் பங்கேற்கும் வீடியோ கான்பரன்ஸ் கூட்டம் நடைபெற உள்ளது. பட்டியலில் எம்.பி., முன்னாள் எம்.பி., எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் மற்றும் மகளிரணி, இளைஞரணி உள்ளிட்ட பல அணிகளின் மாநில நிர்வாகிகளும் இடம்பெற்றுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.