உலகப் பொருளாதார வளர்ச்சி குறித்து விவாதிக்க அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் ஆஷ்வில் நகரில் ஜி20 அமைப்பின் நிதி அமைச்சர்கள் மாநாடு தொடங்கியது. 2022-ல் உக்ரைன் போர் தொடங்கியதிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக இந்த மாநாட்டில் ரஷ்யா பங்கேற்காமல் இருந்த நிலையில், இம்முறை ரஷ்ய நிதியமைச்சர் ஆன்டன் சிலுவானோவ் நேரில் கலந்து கொண்டார்.

ரஷ்யாவை மீண்டும் மாநாட்டில் அனுமதித்த அமெரிக்க முடிவால் அமைப்பில் உள்ள ஐரோப்பிய நாடுகள் அதிருப்தி தெரிவித்தன. போலந்து மற்றும் ஜெர்மனி நாட்டு நிதியமைச்சர்கள் இதை வெளிப்படையாகவே விமர்சித்தனர்.

எதிர்ப்பின் ஒரு பகுதியாக, சிலுவானோவ் உடன் சேர்ந்து குழு புகைப்படம் எடுக்க ஐரோப்பாவைச் சேர்ந்த அமைச்சர்கள் மறுத்தனர். இதனால் அவர் இல்லாமல் குழு புகைப்படம் எடுக்கப்பட்டது.

மேலும், புளூம்பெர்க், நியூயார்க் டைம்ஸ், வால் ஸ்ட்ரீட் ஜர்னல் உள்ளிட்ட ஊடகங்களின் பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக கூறப்படுகிறது; இதற்கும் ஜெர்மனி நிதியமைச்சர் கண்டனம் தெரிவித்தார். பொருளாதார வளர்ச்சி குறித்து பேச கூட்டப்பட்ட மாநாட்டில், ரஷ்ய அமைச்சரின் வருகை காரணமாக சலசலப்பு அதிகரித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.