கிறிஸ்துவ மதத்திற்கு மாறிய ஒருவர், பட்டியலின (எஸ்சி) அந்தஸ்தை முன்வைத்து எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.
தேனி மாவட்டம் தென்கரை சேர்ந்த ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில், தாம் ஹிந்து ஆதிதிராவிடர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும், ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருவதாகவும் தெரிவித்தார். பள்ளியில் ஜாதி பாகுபாடு காரணமாக முதல்வர் தரக்குறைவாக பேசியதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
மேலும், பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் தன்னை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்ததாக கூறிய அவர், பள்ளி தலைவர், முதல்வர், பொருளாளர் உள்ளிட்டோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க போலீசில் புகார் அளித்ததாகவும், அதில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் கோரினார்.
விசாரணையில் பள்ளி நிர்வாகம் தரப்பு, மனுதாரர் 2015-ல் உசிலம்பட்டியிலுள்ள ஒரு சர்ச்சில் ஞானஸ்நானம் பெற்று அதன் பின்னர் கிறிஸ்துவ மதத்தை பின்பற்றி வருவதாகவும், அந்த தகவலை மறைத்துள்ளதாகவும் வாதிட்டது.
நீதிபதி எல். விக்டோரியா கவுரி, ஒருவர் வேறு மதத்தை பின்பற்றி அதன்படி வாழ்ந்துகொண்டே சட்டரீதியான சலுகைகளுக்காக பட்டியல் ஜாதி அந்தஸ்தை கோர முடியாது என்று குறிப்பிட்டார். 1950-ல் செய்யப்பட்ட அரசியலமைப்பு சார்ந்த விதிகளின்படி, ஹிந்து, சீக்கியம் அல்லது பவுத்தம் அல்லாத மதத்தை பின்பற்றுவோர் பட்டியல் ஜாதியினராக கருதப்படமாட்டார்கள் எனக் கூறி, மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.





