அதிமுக சார்பில் வெற்றி பெற்ற 6 எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சட்டமன்ற சபாநாயகர் ஏற்றுக் கொண்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்களில், சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்துள்ளது.

வழக்கில் முன்வைக்கப்பட்ட தகவலின்படி, அந்த 6 பேரும் பின்னர் ஆளும் தவெகவில் இணைந்தனர். அவர்களின் ராஜினாமாவை சபாநாயகர் ஏற்ற நிலையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக வலியுறுத்தி, சபாநாயகரிடம் புகார் மனுக்களையும் அளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

தகுதி நீக்க நடவடிக்கை தொடர்பான விவகாரம் நிலுவையில் இருந்தபோதே ராஜினாமாவை ஏற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகக் கூறி, அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி மற்றும் தேசிய மக்கள் சக்தி கட்சி தலைவர் எம்.எல். ரவி ஆகியோர் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அனைத்து தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், நீதிமன்றம் தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது.

இதற்கிடையில், அதிமுக எம்எல்ஏவாக வெற்றி பெற்று பின்னர் ராஜினாமா செய்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா, தேர்தல் வழக்கு முடியும் வரை மீண்டும் எம்எல்ஏவாக செயல்பட அனுமதி கோரி கூடுதல் மனு தாக்கல் செய்தார். ஆனால் அந்த மனுவை ஏற்க முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.