நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கவும் தேடவும் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு விரிவான நிலவர அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ என்ற தனியார் பயண நிறுவனம் மூலம், தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் ஆகஸ்ட் 23 அன்று நேபாளத்திற்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டது. ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் அவர்கள் சிக்கிய நிலையில், சென்னை உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போனதாக கூறப்பட்டது.
மீட்கப்பட்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள், காணாமல் போனவர்கள் ஆகியோரின் விவரங்களை குடும்பத்தினருக்கு தெரிவிக்கவும், மீட்பு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உத்தரவிட வேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப் பொதுநல மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு மதுரை அமர்வில் இருந்து சென்னைக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், தமிழகத்தில் இருந்து கைலாச யாத்திரைக்கு சென்ற 305 பேரில் 220 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்ட காணாமல் போனவர்களின் குடும்பத்தினரை அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் சென்றுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, மீட்பு மற்றும் தேடுதல் பணிகளில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து மத்திய, மாநில அரசுகள் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.





