அயோத்தி ராமர் கோவிலின் தலைமை செயல் அதிகாரி (சிஇஓ) ஆக இந்திய விமானப்படையில் ஏர் மார்ஷல் பதவியில் பணியாற்றி ஓய்வுபெற்ற ஜிதேந்திர மிஸ்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
பக்தர்களின் காணிக்கைகள் தொடர்பாக முறைகேடு நடந்ததாக எழுந்த புகார்களைத் தொடர்ந்து, மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியது. விசாரணையில் உண்டியல் காணிக்கை எண்ணும் மையத்தில் பணியாற்றிய தற்காலிக ஊழியர்கள் முறைகேடுகளில் ஈடுபட்டது கண்டறியப்பட்டதாகவும், இதுதொடர்பாக 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இனி இதுபோன்ற முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்கும் நோக்கில் புதிய சிஇஓ நியமிக்க முடிவு செய்து தேர்வு நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. இந்தப் பதவிக்காக சுமார் 5,300 விண்ணப்பங்கள் வந்த நிலையில், அவற்றில் இருந்து 18 பேர் தகுதியானவர்களாக குறுக்கப்பட்டனர்.
குறுக்கப்பட்டவர்களை முன்னாள் நீதிபதி பிரமோத் கோலி, ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் விஷணுகாந்த் சதுர்வேதி, ஷீரடி சாய்பாபா அறக்கட்டளையின் முன்னாள் தலைவர் மற்றும் விஞ்ஞானி சுரேஷ் ஹவாரே ஆகியோர் நேர்காணல் செய்தனர். இந்தத் தேர்வு முறையின் மூலம் ஜிதேந்திர மிஸ்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
செய்தி குறிப்பின்படி, ஜிதேந்திர மிஸ்ராவுக்கு விமானப்படையில் 39 ஆண்டுகள் அனுபவம் உள்ளதுடன், போர் விமானம் இயக்கிய அனுபவமும் உள்ளது. 2025 ஜனவரியில் மேற்கு வான் கட்டளை பிரிவின் தலைவராக பொறுப்பு ஏற்ற அவர், பாகிஸ்தானுக்கு எதிரான ‘ஆப்பரேஷன் சிந்தூர்’ நடவடிக்கைக்கு தலைமை ஏற்றதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.





