புதுடில்லி: நாட்டின் பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்த இந்தியர்கள் சுதேசி பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்; உள்நாட்டிலேயே சுற்றுலா செல்ல வேண்டும்; திருமணங்களையும் இந்தியாவிலேயே நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டார்.

சமூக ஊடகத்தில் வெளியிட்ட வீடியோ செய்தியில், 2026-27 நிதியாண்டின் ஏப்.–ஜூன் முதல் காலாண்டில் நாட்டின் ஜிடிபி 7.8% வளர்ச்சி பெற்றதாக அவர் குறிப்பிட்டார். இது ரிசர்வ் வங்கியின் 7% கணிப்பை விட அதிகம் என்றும், இந்த முன்னேற்றம் மக்களின் கூட்டு உறுதியும் கடின உழைப்பும் பிரதிபலிப்பதாகவும் கூறி, பங்களித்த அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தார்.

உலகம் போர்களும் பல்வேறு நெருக்கடிகளும் சூழ்ந்த நிலையில் இருப்பதாகவும், வினியோகத் தொடர்கள் சீர்குலைந்துள்ளதாகவும் மோடி கூறினார். 2020ல் கொரோனா காலத்திலிருந்து உலகளவில் நிலைத்தன்மை குறைந்திருந்தாலும், இந்தியா அதிவேகமாக முன்னேறி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வளர்ச்சியைத் தொடர்ந்து தக்கவைக்கவும் மேலும் உயர்த்தவும், இந்தியர்கள் உள்நாட்டிலேயே சுற்றுலா செல்லவும், திருமணங்களை நாட்டுக்குள்ளேயே நடத்தவும் வேண்டும் என்றார். அத்தியாவசிய தேவையில்லையெனில் தங்கம் வாங்குவதை கூட தவிர்க்க வேண்டும் என்றும், சுதேசி மற்றும் தற்சார்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது பொருளாதார வளர்ச்சிக்கு உதவும் என்றும் கூறினார்.

மேலும், நாட்டின் 100வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இளைஞர்களிடம் ஒரு வளர்ந்த இந்தியாவை ஒப்படைக்க முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாக மோடி தெரிவித்தார். நாட்டின் வளர்ச்சியை பொறுக்க முடியாத எதிர்க்கட்சியினர் வீண் வதந்திகளை பரப்புவதாக குற்றம்சாட்டி, அவற்றை நம்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.