கிர்கிஸ்தான் தலைநகர் பிஷ்கெக்கில் நடைபெற்ற 26வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (எஸ்.சி.ஓ.) மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி, பயங்கரவாதத்திற்கு நிதியுதவி, ஆட்சேர்ப்பு, பாதுகாப்பான புகலிடங்கள் உள்ளிட்ட முழுக் கட்டமைப்பையும் நாடுகள் ஒன்றிணைந்து அழிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பும் உள்ளிட்ட பல நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
2001ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட எஸ்.சி.ஓ., பயங்கரவாதம் மற்றும் பிரிவினைவாதத்தை எதிர்கொண்டு பிராந்திய அமைதி, பாதுகாப்பை உறுதி செய்வதை முக்கிய நோக்கமாகக் கொண்டுள்ளது. அமைப்பு தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைவதை ஒட்டி இந்த ஆண்டு மாநாடு நடைபெற்றது; “நிலையான அமைதி, வளர்ச்சி மற்றும் வளத்திற்காக ஒன்றிணைந்து பயணிப்போம்” என்பதே மையக்கருத்தாக அறிவிக்கப்பட்டது.
மாநாட்டில் பேசிய மோடி, பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் இரட்டை நிலைப்பாடுகளுக்கு இடமில்லை என்பதை அனைத்து நாடுகளும் ஒரே குரலில் தெரிவிக்க வேண்டும் என்றார். மேலும், உலக நாடுகளுக்கிடையிலான மோதல்களுக்கு அமைதியான வழியில் தீர்வு காணப்பட வேண்டும்; எந்தப் பிரச்னைக்கும் போர்க்களத்தில் தீர்வு கிடையாது; பேச்சுவார்த்தை மற்றும் துாதரக நடவடிக்கைகள் மூலமே போர்களும் மோதல்களும் முடிவுக்கு வர வேண்டும் எனக் கூறினார்.
இணைப்பு திட்டங்கள் குறித்து, சந்தைகளை ஒன்றிணைத்து வர்த்தகத்தை எளிதாக்கி வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கும் முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு அளிப்பதாக அவர் தெரிவித்தார். அதே நேரத்தில், இத்தகைய திட்டங்கள் அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டை மதிப்பதாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
எஸ்.சி.ஓ. அமைப்பு பல நாகரிகங்கள், கலாசாரங்கள், சிந்தனைகள் சந்திக்கும் மேடையாக இருப்பதாக குறிப்பிட்ட மோடி, அடுத்த 25 ஆண்டுகளில் மக்களிடையிலான நேரடி தொடர்புகளுக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றார். இளைஞர்களிடையிலான தொடர்பை வலுப்படுத்த ‘ஸ்டார்ட் அப்’ மன்றம், இளம் எழுத்தாளர்கள் மாநாடு, இளம் விஞ்ஞானிகள் மன்றம் போன்ற முயற்சிகளை இந்தியா மேற்கொண்டு வருவதாகவும் அவர் கூறினார்.





