பேக்கெட் உணவுப் பொருட்களில் தயாரிப்பு மற்றும் காலாவதி தேதிகளை மாற்றி ஒட்டும் மோசடி நடந்து வந்ததாக மகாராஷ்டிரா உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். உணவுப் பாதுகாப்பு ஆணையர் துக்காராம் முண்டே தலைமையிலான குழுவினர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர்.

முண்டே பொறுப்பேற்ற கடந்த இரண்டு மாதங்களில் 1,500க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் உணவு உற்பத்தி நிறுவனங்களில் சோதனைகள் நடத்தப்பட்டதாக அதிகாரிகள் கூறினர். விதிமீறிய இடங்கள் பூட்டி சீல் வைக்கப்பட்டதுடன், கெட்டுப்போன, காலாவதியான மற்றும் கலப்பட உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டன.

அந்த வரிசையில் நவி மும்பையில் நடைபெற்ற சமீபத்திய சோதனையில், பிரபல நிறுவனங்களின் பேக்கெட் உணவுப் பொருட்களில் தேதிகளை மாற்றியமைத்ததாக மாநில உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களின் மதிப்பு ₹76 லட்சத்துக்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டது.

முன்னணி பிராண்டுகளின் சிப்ஸ், நூடுல்ஸ், சூப் பாக்கெட்டுகள் உள்ளிட்டவை இதில் அடங்கும். இந்த விவகாரத்தில் துர்பே பகுதியில் உள்ள ‘சாதனா என்டர்பிரைசஸ்’ நிறுவனத்தின் உரிமம் உடனடியாக ரத்து செய்யப்பட்டு, வழக்கு பதிவு செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.