சிக்கிமில் பனிப்பாறை ஏரிகளால் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (NDMA) எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தின் பின்னணியில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
NDMA தகவலின்படி, சிக்கிமில் 40க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் அபாயகரமான நிலையில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. இதில் 7 ஏரிகள் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 16 ஏரிகள் விரிவான அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. இவற்றில் பல ஏரிகள் சுமார் 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளன. ஏரியின் ஆழம், நீளம், நீரளவு, பனிப்பாறைகளின் தன்மை, நிலச்சரிவு அபாயம் உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாக ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த எச்சரிக்கையைத் தொடர்ந்து அபாயத்தை குறைக்கும் நடவடிக்கையாக ஏரிகளின் நீர்மட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக NDMA கூறியுள்ளது. அதன்படி, ஷாகோசூ ஏரியின் நீர்மட்டத்தை 40 மீட்டர் வரை குறைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன; பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டால் கீழ்நோக்கி செல்லும் நீரளவை குறைப்பதே இதன் நோக்கமாகும்.





