காத்மாண்டு: சமீபத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட பனிப்பாறை உடைப்பு, திடீர் வெள்ளப் பெருக்கு மற்றும் நிலச்சரிவுகளுக்கு பருவநிலை மாற்றமே அடிப்படை காரணம் என நேபாளம் தெரிவித்துள்ளது. இதனால் வழங்கப்படும் உதவியை வழக்கமான மனிதாபிமான நிவாரணமாக அல்ல, பருவநிலை பாதிப்புக்கான இழப்பீடாகவே பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிசிர் கானல், இந்த பேரழிவை தொண்டு அல்லது சாதாரண நிவாரண நடவடிக்கையாகக் கருதக் கூடாது என்று தெரிவித்தார். உலகளாவிய புவி வெப்பமடைதலால் ஏற்பட்ட இழப்புகளுக்கு நீதி மற்றும் இழப்பீடு கிடைக்க வேண்டியதாக அவர் வலியுறுத்தினார்.

இதற்காக, உலக நாடுகளின் கூட்டமைப்பின் கீழ் செயல்படும் ‘நஷ்டம் மற்றும் பாதிப்புக்கான நிதி’ அமைப்பிடம் நேபாள நிதியமைச்சகம் முறையான கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறப்பட்டது.

இந்தியா, சீனா, அமெரிக்கா போன்ற அதிக கார்பன் உமிழ்வு கொண்ட தொழில்மயமான நாடுகள் தார்மீகமும் சட்டப்பூர்வமும் ஆன பொறுப்பை ஏற்று இழப்பீடு வழங்க வேண்டும் என அமைச்சர் தெரிவித்தார்.

நேபாளத்தில் வெள்ள பாதிப்புகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,003 ஆக உயர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 583 வெளிநாட்டவர்கள் மற்றும் பல பாதுகாப்புப் பணியாளர்கள் உட்பட சுமார் 4,000 பேர் இன்னும் காணவில்லை; இதுவரை 12,000 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்தில் 16 பேர் உயிரிழந்ததாகவும் 550 பேர் காணவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.