காத்மாண்டு: நேபாளத்தின் சில பகுதிகளில் ஏற்பட்ட கடும் வெள்ளத்தில் கட்டடங்களும் உட்கட்டமைப்புகளும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், உறுதியாக நின்ற ஒரு பச்சை நிற வீடு சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீட்டின் உரிமையாளர், இது சுமார் 40 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதாகவும், வலுவான அஸ்திவாரம் காரணமாகவே வீடு நிலைத்ததாகவும் தெரிவித்தார்.
26ம் தேதி திபெத்தை ஒட்டிய நேபாள பகுதியில் பனிப்பாறை சரிந்ததையடுத்து போட்டேகோஷி ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பல மாடி வீடுகள், வாகனங்கள், பாலங்கள் உள்ளிட்டவை அடித்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
உரிமையாளர் பிரகாஷ் கூறுகையில், தாம் கடையில் இருந்தபோது வெள்ள அபாய எச்சரிக்கை வந்ததாகவும், உடனே வீட்டிற்கு ஓடி வந்து குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்ததாகவும் சொன்னார். வெளியேற முயன்றபோது வெள்ளம் சூழ்ந்ததால் மேல்மாடிக்கு சென்றதாகவும், 4வது மாடிக்கும் நீர் வந்ததால் மேற்கூரைக்கு ஏறியதாகவும் அவர் விளக்கினார். அந்த நேரத்தில் மகன் பள்ளிக்குச் சென்றிருந்ததால், “எங்களுக்கு ஏதாவது ஆனால் அவன் என்ன செய்வான்” என்ற எண்ணமே மனதில் ஓடியதாகவும் கூறினார்.
ஆற்றை ஒட்டி வீடு இருப்பதால் அடித்தளத்தில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டதாகவும், அக்காலத்தில் சிமென்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களின் தரம் சிறந்ததாக இருந்ததாகவும் பிரகாஷ் தெரிவித்தார். தரைதளத்தில் இருந்த பொருட்கள் சேதமடைந்ததுடன், அங்கிருந்த இருசக்கர வாகனங்கள் நீரில் அடித்துச் செல்லப்பட்டதாகவும் கூறினார்.
சில மணி நேரங்களுக்கு பிறகு நீர்மட்டம் குறையத் தொடங்கியதும், சிலர் கயிறு மற்றும் பைப் உதவியுடன் குடும்பத்தினரை மீட்டதாக அவர் கூறினார். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், தற்போது காத்மாண்டுவில் தங்கியுள்ளோம்; மீண்டும் அதே வீட்டிலிருந்து வாழ்க்கையைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம் என்றும் தெரிவித்தார்.
மனைவி லஷ்மி பாண்டே கூறுகையில், நிலைமை மனிதக் கட்டுப்பாட்டை மீறியபோது கடவுளை வேண்டி, தொடர்ந்து ‘ஓம் நம சிவாய’ மந்திரமும் ஹனுமன் சலீசா பாடலும் பாடினோம் என்றார். உயிர்தப்பியது “இரண்டாவது பிறப்பு” போல உணர்வதாகவும், பேரழிவுக்கிடையிலும் வீடு உறுதியாக இருந்தது அதிர்ஷ்டம் என்றும் அவர் கூறினார். மேலும், நேபாளத்தில் பூகம்பம் ஏற்பட்டபோதும் கடும் அதிர்வை உணர்ந்ததாகவும், அருகிலுள்ள வீடுகள் சேதமடைந்த நிலையில் அப்போது அருகிலிருந்தவர்கள் உதவியதாகவும் நினைவுகூரினார்.





