நாடு முழுவதும் இயக்கப்படும் ரயில்களில் உள்ள பழைய ரயில் பெட்டிகளை முழுமையாக மாற்ற 2028 மார்ச் மாதத்துக்குள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர். தற்போது இன்னும் சுமார் 25% பெட்டிகள் பழைய வகையிலேயே உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவு ரயில்களில் பழைய ஐ.சி.எப். பெட்டிகளை நீக்கி, எல்.எச்.பி. எனப்படும் நவீன பெட்டிகளை இணைக்கும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த பெட்டிகளில் தீப்பிடிக்கும் அபாயம் குறைவாக இருப்பதுடன், சொகுசான இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங் போன்ற வசதிகளும் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விபத்துகள் நேரிடும் போது பயணிகளின் உயிர் பாதுகாப்பில் எல்.எச்.பி. பெட்டிகள் முக்கிய பங்காற்றுகின்றன என்றும், ஜெர்மனி தொழில்நுட்பத்தில் தயாரிக்கப்படும் இவை பழைய ஐ.சி.எப். பெட்டிகளை விட பல மடங்கு பாதுகாப்பானவை என்றும் ரயில்வே தரப்பு கூறியது.

சென்னை அருகே கவரப்பேட்டையில் நடந்த ரயில் விபத்தில் பெரும் சேதம் ஏற்பட்டாலும், எல்.எச்.பி. பெட்டிகளின் வடிவமைப்பு காரணமாக பயணிகள் உயிர் தப்பியதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர். தடம் புரளும் சூழலில் பெட்டிகள் ஒன்றின் மேல் ஒன்று ஏறி நசுங்காமல், தனித்தனியாக பிரிந்து தரையோடு தங்கி விடும் தனிச்சிறப்பு இதற்கு காரணம் எனவும் தெரிவித்தனர்.

தற்போது நாடு முழுதும் சுமார் 75% ரயில்களில் எல்.எச்.பி. பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25% சேவைகளிலும் பழைய ஐ.சி.எப். பெட்டிகளை 2028 மார்சுக்குள் மாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.