சென்னை: ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அதே நாளிலேயே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். மேலும், திமுக ஆட்சிக்காலத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக சட்டசபையில் விதி 110ன் கீழ் அவர் வெளியிட்ட அறிவிப்புகளில் பல நகர்ப்புற உள்கட்டமைப்பு திட்டங்கள் இடம்பெற்றன. திருநெல்வேலி மாநகராட்சியில் 9 மெகாவாட் மற்றும் சேலம் மாநகராட்சியில் 10 மெகாவாட் திறனில் திடக்கழிவிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யும் திட்டங்கள் மொத்தம் ரூ.547 கோடியில் செயல்படுத்தப்படும் என கூறினார்.

சென்னை உட்பட அனைத்து நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் சாலைகள் சீரமைப்பு மற்றும் புதிய சாலைகள் அமைக்கும் பணிகள் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்றும், பள்ளிகளைச் சுற்றியுள்ள குழந்தைகள் பாதுகாப்புக்கான சாலை வசதிகள் மற்றும் 105 சாலை சந்திப்புகள் மேம்பாடு ரூ.110 கோடியில் செய்யப்படும் என்றும் அறிவித்தார். பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற பணிகள் சேர்த்து ரூ.275 கோடியில் ஒருங்கிணைந்த நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்டங்களில், மதுரை மாநகராட்சியின் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்க நடப்பாண்டில் முதற்கட்டமாக ரூ.2,400 கோடியில் பணிகள் மேற்கொள்ளப்படும் என கூறினார். நாகர்கோவில் மாநகராட்சியின் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகள், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளில் ரூ.960 கோடியில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்றும் அறிவித்தார்.

மேலும், சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் அமைப்புகள் மேம்பாட்டுக்கு ரூ.236 கோடி செலவிடப்படும் என்றும், வடசென்னை, ஆவடி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளின் தேவைக்காக மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடியில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்தார். ஆவடி மாநகராட்சியில் 24 மணி நேர குடிநீர் வழங்க ரூ.500 கோடி திட்டம், பல நகரங்களில் குடிநீர் வசதி மேம்பாடு, கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலைய திறன் உயர்த்தல், பூங்காக்கள், பள்ளி உள்கட்டமைப்பு, மேலும் சிதம்பரம், கடலூர், கன்னியாகுமரி பகுதிகளில் பாரம்பரியம் மற்றும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளும் அறிவிப்புகளில் இடம்பெற்றன.