தேர்தல்களில் வாக்காளர் ரகசியத்தை மேலும் உறுதிப்படுத்தும் நோக்கில், ஓட்டு எண்ணிக்கையில் ‘டோட்டலைசர்’ கருவிகளை அறிமுகப்படுத்தலாமா என்பது குறித்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்த வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
யோகேஷ் குப்தா தாக்கல் செய்த மனுவை விசாரித்தபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. குறிப்பிட்ட ஓட்டுச்சாவடியில் எந்தக் கட்சிக்கு எவ்வளவு வாக்குகள் கிடைத்தன என்பது வெளிப்படையாகத் தெரியவருவது தேர்தலுக்குப் பிந்தைய வன்முறை மற்றும் வாக்காளர்கள் அச்சுறுத்தப்படுவதற்குக் காரணமாகலாம் என மனுவில் கூறப்பட்டது. இதைத் தவிர்க்க, பல மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களின் முடிவுகளை ஒன்றாக இணைத்து மொத்தமாகக் கணக்கிடும் ‘டோட்டலைசர்’ முறையைப் பயன்படுத்த வேண்டும் என கோரப்பட்டது.
மனுதாரர் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் அஸ்வினி உபாத்யாயா மற்றும் கோபால் சங்கரநாராயணன் வாதிடுகையில், வாக்காளர் தனியுரிமையைப் பாதுகாக்க உலகளவில் இம்முறை பயன்படுத்தப்படுவதாக தெரிவித்தனர். சட்ட ஆணையத்தின் 255-வது அறிக்கையை மேற்கோள் காட்டிய அவர்கள், 2018-ல் தேர்தல் ஆணையமே ‘டோட்டலைசர்’ அறிமுகப்படுத்த வேண்டிய காலம் வந்துவிட்டதாக கூறியிருந்ததாகவும், தேர்தல் நடத்தை விதிகளில் ஆலோசனையுடன் திருத்தம் செய்தால் போதுமானது; புதிய சட்டம் தேவையில்லை என்றும் வாதிட்டனர்.
தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர் தாமா சேஷாத்ரி நாயுடு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பல தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்ததாகவும், மத்திய அமைச்சர்கள் குழுவும் திட்டத்தை நிராகரித்ததாகவும் கூறினார். மேலும், படிவம் 17சி வழியாக முகவர்கள் சரிபார்க்கும் நடைமுறை உள்ளிட்ட செயல்முறை அம்சங்கள் ‘டோட்டலைசர்’ பயன்படுத்தினால் சாத்தியப்படாமல் போகலாம்; ஒப்புகை சீட்டு ரசீதுகளைச் சரிபார்ப்பதிலும் சிக்கல்கள் ஏற்படலாம் என அவர் சுட்டிக்காட்டினார்.
தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய்மால்யா பக்சி அமர்வு, தேர்தல் ஆணையம் முறையை முற்றிலும் நிராகரிக்காமல் நடைமுறை சிக்கல்களை மட்டும் கூறியுள்ளதாகக் குறிப்பிட்டது. எனவே, தேர்தல் நடத்தை விதிகள் 1961-ன் விதி 59ஏ மற்றும் சட்ட ஆணையத்தின் பரிந்துரைகளை ஆழமாகப் பரிசீலித்து, தடைகள் அல்லது எதிர்மறை தாக்கங்கள் உள்ளதா என்பதை ஆய்வு செய்து மத்திய அரசு தன் நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டது. தேர்தல் ஆணையம் உரிய கோரிக்கை/பரிந்துரையை உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்ப வேண்டும்; அதன் மீது மத்திய அமைச்சரவை முடிவு எடுக்க வேண்டும் என்றும் கூறி, விசாரணையை ஒத்திவைத்தது.





