மஹாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்ட நகராட்சி மருத்துவமனையில் மருத்துவப் பணியாளர்கள் மீது நடந்த தாக்குதல் தொடர்பான வழக்கு, ஜாமின் உத்தரவுகளைச் சுற்றிய சர்ச்சையால் உச்ச நீதிமன்றம் வரை வந்துள்ளது.
வழக்கின் விவரங்களின்படி, கர்ப்பிணிப் பெண்ணுக்குச் சிகிச்சை தாமதமானதாக கூறி, சிவசேனா கவுன்சிலர் ரமேஷ் மத்ரே தலைமையிலான கும்பல் கடந்த ஜூலை மாதம் மருத்துவமனை ஊழியர்களை, பெண் மருத்துவர் உட்பட, தாக்கியதாக குற்றச்சாட்டு உள்ளது.
முதலில் விசாரணை நீதிமன்றம் ரமேஷ் மத்ரேவுக்கு ஜாமின் வழங்கியது. பின்னர் மும்பை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்துக் கொண்டு, ஜாமினுக்கு தடை விதித்து அவர் சரணடைய உத்தரவிட்டது. ஆனால் ஆகஸ்ட் 7-ல் உயர் நீதிமன்றம் ரமேஷ் மத்ரே மற்றும் மேலும் மூவருக்கு நிபந்தனையுடன் கூடிய ஜாமின் வழங்கியது.
உயர் நீதிமன்றம் விதித்த ஜாமின் நிபந்தனைகளுக்கு எதிராக ரமேஷ் மத்ரே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். நீதிபதிகள் விக்ரம் நாத், அகஸ்டின் ஜார்ஜ் மாசி, சந்தீப் மேத்தா ஆகியோர் அமர்வு முன் விசாரணை வந்தபோது, மருத்துவத் துறையினரை மதிக்காதவர்கள் ஜாமின் உள்ளிட்ட எந்த நிவாரணத்துக்கும் தகுதியற்றவர்கள் எனக் கடுமையாகக் குறிப்பிட்டதுடன், மருத்துவமனைக்குள் புகுந்து பணியாளர்களை தாக்கலாம் என நினைப்பதா எனவும் கேள்வி எழுப்பியது.
விசாரணையின் போது, குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கப்பட்டதை எதிர்த்து மஹாராஷ்டிர அரசு சார்பில் விரைவில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு தாக்கல் செய்யப்படும் என அரசு தரப்பு தெரிவித்தது. இதை ஏற்றுக் கொண்ட அமர்வு, வழக்கை செப். 7-க்கு ஒத்திவைத்தது.





