அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கும் ‘தாய்மாமன் தங்க மோதிர’ திட்டத்திற்காக தகுதியான பயனாளிகள் பட்டியலை தமிழக அரசு தயாரித்து வருகிறது.
முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையின் பிறந்த நாளான செப்.15 அன்று திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உதவிக்காக தாய்மார்கள் தனியாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை.
அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிறக்கும் குழந்தைகள் குறித்த விவரங்கள் திரட்டப்படுகின்றன. கர்ப்பிணிகளிடமிருந்து ஆதார், ஸ்மார்ட் கார்டு தகவல், பிக்மி எண், தாயின் வங்கி கணக்கு விவரம் ஆகியவை பெறப்பட்டு, மருத்துவமனை வழங்கும் டிஸ்சார்ஜ் ஆவணங்களுடன் இணைத்து தயாராக வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஒரு அரசு மருத்துவமனையில் மட்டும் மாதந்தோறும் சுமார் 500 முதல் 550 வரை பிரசவங்கள் நடைபெறுகின்றன. ஆரம்ப சுகாதார நிலையங்களையும் சேர்த்து, நேற்று வரை 11,500க்கும் மேற்பட்டோர் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனை மருத்துவர்கள் கூறுகையில், திட்டம் தொடங்கும் நாளில் தகுதியானவர்களுக்கு அழைப்பு வரும் என்றும், தினசரி பிரசவங்கள் நடைபெறுவதால் பயனாளிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தனர்.





