காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமாரின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் த.வெ.க.–காங்கிரஸ் கூட்டணியில் ஏற்பட்ட சலசலப்பு, மூத்த காங்கிரஸ் தலைவர்கள் முதல்வர் விஜயை சந்தித்து பேசியதையடுத்து கட்டுப்பாட்டுக்குள் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் கூறியதன்படி, தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் மற்றும் ராஜ்யசபா எம்.பி. பிரவீன் சக்கரவர்த்தி ஆகியோர் நேற்று முன்தினம் தலைமைச்செயலகத்தில் முதல்வர் விஜயை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
தனியார் ஊடகம் நடத்திய கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கான விருப்பத் தலைவர்களில் மோடி, ராகுல் ஆகியோருக்கு அடுத்ததாக விஜய் இருப்பதாக தகவல் வெளியானதைத் தொடர்ந்து, த.வெ.க. தரப்பில் விஜயை “வருங்கால பிரதமர்” என அழைக்கத் தொடங்கியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, த.வெ.க. கூட்டணி அமைச்சரவையில் உள்ள காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார், ‘இண்டி கூட்டணி வேட்பாளர் ராகுலை த.வெ.க. ஆதரிக்க வேண்டும்; இல்லையெனில் கூட்டணியில் இருந்து விலகுவோம்; இரண்டு அமைச்சர்களும் பதவியை துறப்போம்’ என எச்சரித்ததாகவும், இதனால் கூட்டணிக்குள் பரபரப்பு ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க காங்கிரஸ் பொதுச்செயலர் கே.சி.வேணுகோபால் அறிவுறுத்தலின் பேரில் சந்திப்பு நடந்ததாக நிர்வாகிகள் கூறினர். அப்போது கூட்டணியின் ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படக்கூடாது என்றும், தொண்டர்கள் மத்தியில் தேவையற்ற குழப்பம் உருவாக்கும் வகையில் யாரும் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட வேண்டாம் என்ற டெல்லி மேலிடத்தின் நிலைப்பாட்டையும் அவர்கள் முதல்வரிடம் தெரிவித்தனர். இதை ஏற்றுக்கொண்ட விஜய், கூட்டணி தொடர்பான வதந்திகளை நம்ப வேண்டாம்; அனைவரும் ஒருங்கிணைந்து செயல்படுவோம் என கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.





