சென்னை: சட்டசபையில் வியாழக்கிழமை முதல்வர் விஜய் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி இடையே கேள்வி–பதில் தொடர்பாக கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
உதயநிதி பேசுகையில், எதிர்க்கட்சியின் ஆட்சிக்காலத்தில் அதிக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டதாக அமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்ட ஒழுங்கு பிரச்னைகளுக்கு அரசை விமர்சித்தவர்கள் இப்போது ஆட்சிக்கு வந்ததும் காரணங்களை மாற்றிப் பேசுவதாக கூறி, திசைதிருப்பாமல் முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இதற்கு பதிலளித்த முதல்வர் விஜய், எல்லாவற்றுக்கும் தெளிவான பதில் திங்கட்கிழமை அளிப்பதாக தெரிவித்தார். அதே நேரத்தில், அந்த நாளில் யாரும் எழுந்து வெளியேற மாட்டோம் என்று எதிர்க்கட்சி உறுதி தர வேண்டும் என சபாநாயகர் வழியாக கேட்டுவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார்.
உதயநிதி பதிலளிக்கையில், இதைச் சொல்லிவிட்டு யார் வெளியேறினார் என்பதை மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார். மேலும், முதல்வர் இதை முன்கூட்டியே தெரிவித்திருந்தால் இந்த பிரச்னை வந்திருக்காது என்றும், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் தர தயாராகி வர வேண்டும் என்றும் கூறினார்.
இந்த நிலையில், முதல்வர் ஏற்கனவே தயாராகி வந்திருக்கிறார் என சபாநாயகர் கூற, அப்படியானால் இப்போதே பதில் அளிக்கலாம் என உதயநிதி தெரிவித்தார். முதல்வர் மூலமாக தரமான பதிலடி வழங்கப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் கூறினார்.





