புதுடில்லி: மத்திய அரசின் கீழ் செயல்படும் துறைகள் மற்றும் அமைப்புகள் மீது 2025ஆம் ஆண்டில் மொத்தம் 70,584 ஊழல் மற்றும் லஞ்சம் தொடர்பான புகார்கள் பெறப்பட்டதாக மத்திய விஜிலன்ஸ் கமிஷன் (CVC) தெரிவித்துள்ளது.
புகார்கள் குறித்த ஆண்டறிக்கையில், 64,905 புகார்கள் தீர்வு காணப்பட்டதாகவும், 5,679 புகார்கள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. நிலுவையில் உள்ளவற்றில் 2,002 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நடவடிக்கைக்காக காத்திருந்தன.
அதிகபட்சமாக வங்கிகள் தொடர்பாக 9,933 புகார்கள் பதிவானது. இதில் 9,520 புகார்கள் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட நிலையில், 413 புகார்கள் நிலுவையில் உள்ளன; அவற்றில் 52 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளதாக அறிக்கை குறிப்பிடுகிறது.
ரயில்வே துறை இரண்டாம் இடத்தில் உள்ளது; 9,381 புகார்கள் பெறப்பட்டதில் 8,754 புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 627 புகார்களில் 10 புகார்கள் மூன்று மாதங்களுக்கு மேலாக நிலுவையில் உள்ளன. பொதுவாக மூன்று மாதங்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும், நிலுவை குறைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அறிக்கை தெரிவிக்கிறது.





