சென்னையில் நடைபெற்ற தி.மு.க. மறுசீரமைப்பு தலைமை நிலைய பிரதிநிதிகள் கூட்டம், காணொலி மாநாடு வழியாக கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், பிரதிநிதிகள் அனைவரும் மாவட்டங்களுக்கு சென்று எந்தவித அழுத்தங்களுக்கும் அடிபணியாமல் தங்களது பணிகளைச் சரியாகச் செய்ய வேண்டும் என்றும், கட்சியின் அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
கிளை முதல் தலைமை வரையிலான பொறுப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என அவர் ஏற்கெனவே அறிவித்துள்ள நிலையில், அது நேர்மையாக நடைபெறும் என்பதை கட்சியினரிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்றும் அவர் கூறினார்.
செயற்குழு தீர்மானங்களின் அடிப்படையில் பலருக்கு பதவி பறிபோகும் சூழல் உருவாகலாம் என்றாலும், அவர்களில் யாரையும் கைவிடப்போவதில்லை என ஸ்டாலின் உறுதி அளித்தார். தகுதிக்கேற்ப வேறு பொறுப்புகள் வழங்கப்படும் வகையில் முடிவு எடுக்கப்படும் என்பதையும் பிரதிநிதிகள் விளக்க வேண்டும் என்றார்.
மறுசீரமைப்பு பணி முடிந்த பின் உறுப்பினர் சேர்க்கை தொடங்க வேண்டும் என்றும், கட்சியின் கட்டமைப்பே வலிமையான ஆணிவேர்; அதை பலப்படுத்தும் பொறுப்பு பிரதிநிதிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.





