நில இழப்பீடு வழங்குவதில் மாதக்கணக்கில் தாமதம் செய்ததாகக் கூறி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் செங்கல்பட்டு எஸ்.பி.க்கு உத்தரவிட்டுள்ளது.

சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தைச் சேர்ந்த எம்.ஆர். வசந்தன், தனது பட்டா நிலத்தை அதிகாரிகள் நீர்வழிப்பாதையாக மாற்றியதாகவும், அதை மீட்டுத் தர வேண்டும் என்றும் 2024ல் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். நீதிமன்ற உத்தரவின்படி அந்த நிலத்துக்கான இழப்பீடு ரூ.2.90 கோடியாக நிர்ணயிக்கப்பட்டது.

நீதிபதிகள் ஜி. ஜெயச்சந்திரன், இ. மனோகரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, இழப்பீடு நிர்ணயிக்கப்பட்டு 16 மாதங்கள் கடந்தும் தொகை வழங்கப்படவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நீதிமன்றம், பொதுப்பயன்பாடு என்ற பெயரில் உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றாமல் தனியார் நிலத்தை கைப்பற்றியது தவறு என்றும், நீதிமன்றம் உத்தரவிட்ட இழப்பீட்டை வழங்காமல் தொடர்ந்து காலதாமதம் செய்வது கடும் கண்டனத்துக்குரியது என்றும் குறிப்பிட்டது.

செங்கல்பட்டு கலெக்டர், தாம்பரம் ஆர்.டி.ஓ., தாம்பரம் தாசில்தார், நீர்வளத் துறை உதவி செயற்பொறியாளர் மற்றும் பி.டி.ஓ. ஆகியோருக்கு எதிராக மனுதாரர் செங்கல்பட்டு எஸ்.பி.யிடம் புகார் அளிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் எஸ்.பி. வழக்குப்பதிவு செய்து விசாரித்து செப்.3 மாலை 4.30 மணிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமர்வு உத்தரவிட்டது.