நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி காணாமல் போனவர்களை மீட்கவும் கண்டறியவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து, மத்திய அரசு மற்றும் தமிழக அரசு விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கும்பகோணத்தைச் சேர்ந்த ‘சூப்பர் யாத்ரா டிராவல்ஸ்’ என்ற தனியார் பயண நிறுவனம் மூலம் தமிழ்நாடு, புதுச்சேரியைச் சேர்ந்த 57 பேர் நேபாளம் சென்ற நிலையில், ஆகஸ்ட் 26 அன்று ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் பலர் சிக்கினர். இதில் சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி சிவஞானம் உள்ளிட்டோர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது.
மீட்கப்பட்டவர்கள், சிகிச்சையில் இருப்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களை குடும்பத்தினருக்கு தெரிவிக்க உத்தரவிட வேண்டும் என திண்டுக்கல்லைச் சேர்ந்த வழக்கறிஞர் பர்வேஷ் முஷ்ரப் பொதுநல மனு தாக்கல் செய்தார். மதுரை அமர்வில் தொடங்கிய இந்த வழக்கு பின்னர் சென்னைக்கு மாற்றப்பட்டு, தலைமை நீதிபதி எஸ்.ஏ. தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண், தமிழகத்திலிருந்து யாத்திரை சென்ற 305 பேரில் 220 பேர் மீட்கப்பட்டு சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீதமுள்ள 85 பேரை மீட்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், காணாமல் போனவர்களின் குடும்பத்தினர் அரசு செலவில் காத்மாண்டு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதையடுத்து, மீட்பு நடவடிக்கைகள் தொடர்பான முழுமையான நிலவர அறிக்கையை மத்திய மற்றும் மாநில அரசுகள் தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டு, வழக்கை அடுத்த வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.





